search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கைது
    X
    கைது

    திருப்பூர் நகைக்கடையில் நடந்த 3 கிலோ நகை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

    திருப்பூர் நகைக்கடை கொள்ளையில் மூளையாக செயல்பட்ட முர்டாஷா என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் புதுராம கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரின் நகைக்கடையில் 3.25 கிலோ தங்க நகைகள், 28 கிலோ வெள்ளி நகைகள் மற்றும் ரூ. 14.50 லட்சம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க திருப்பூர் மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஏ.ஜி.பாபு உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்டது பீகார் மாநிலத்தை சேர்ந்த மஹ்தாப் ஆலம், பத்ருல் (27), திலாகாஸ்(20), முகமது சுப்ஹான் (30) என்பது தெரியவந்தது. அவர்களை நாக்பூர் அருகே ரெயிலில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்களை திருப்பூர் அழைத்து வந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் நகைக்கடை கொள்ளையில் மூளையாக செயல்பட்ட முர்டாஷா என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

    முர்டாஷா திருப்பூரில் பனியன்களுக்கான பட்டன் விற்பனை கடை வைத்துள்ளார். மஹ்தாப் ஆலம் திருப்பூர் வந்தபோது நகைக்கடையை நோட்டமிட்டு கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர். அதற்கான திட்டங்களை முர்டாஷாவே வகுத்து கொடுத்துள்ளார்.

    கொள்ளையடிக்க திட்டம் வகுத்ததையடுத்து பீகாரில் இருந்து பத்ருல், திலாகாஸ், முகமது சுப்ஹான் ஆகியோரை வரவழைத்துள்ளனர். அதன்பின் கடந்த 4-ந்தேதி அதிகாலை கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அவர்களை பீகாருக்கு செல்லும்படி முர்டாஷா தெரிவிக்கவே 4 பேரும் பீகாருக்கு தப்பி சென்றுள்ளனர். ஆனால் போலீசார் பிடியில் 4 பேரும் சிக்கிக்கொண்டனர். முர்டாஷாவும் போலீசார் விசாரணையில் சிக்கிக்கொண்டார்.

    தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முர்டாஷா இதுபோல் திருப்பூரில் வேறு ஏதேனும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா? என்றும் விசாரணை நடத்தப்படுகிறது. சந்தேகப்படும்படியான வடமாநில தொழிலாளர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.


    Next Story
    ×