search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அண்ணாமலை
    X
    அண்ணாமலை

    தமிழக உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசை காட்டிலும் அதிக இடங்களில் வெற்றிபெற வேண்டும்- அண்ணாமலை பேச்சு

    நீட் மசோதாவை இரண்டாவது முறையாக ஆளுநருக்கு அனுப்ப இன்று சட்டசபை கூடியுள்ளது. நீட் தேர்வு மூலமாக ஏழை மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் படிக்க இடம் கிடைத்துள்ளது. நீட் மூலம் சமூக நீதி அனைத்து மக்களுக்கும் கிடைத்துள்ளது.

    நாகர்கோவில்:

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா தனித்து போட்டியிடுகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    குமரி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக அவர் இன்று குமரி மாவட்டம் வந்தார். நாகர்கோவிலில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

    குமரி மாவட்டத்தில் உள்ள 980 இடங்களில் 615 இடங்களில் நாம் போட்டியிடுகிறோம். இந்த மண் தேசியத்தில் இருந்து ஒரு இன்ச் கூட அசையாத மாவட்டம். ஒரு கட்சி நின்ற இடத்தில் 100 சதவீதம் இடங்களில் வெற்றிபெற முடியும் என்பதை நீங்கள் நிருபிப்பீர்கள். சென்னையில் 200 வார்டுகளிலும் போட்டியிடுகிறோம். கோவை போன்ற இடங்களில் அனைத்து இடங்களில் நிற்கிறோம். நாம் தனியாக நிற்கிறோம் என முடிவு செய்த உடனே கன்னியாகுமரி மாவட்ட தலைவர் தர்மராஜிக்கு போன் செய்து பேசினேன்.

    தனித்து போட்டியிட கன்னியாகுமரி மாவட்டம் எப்போதும் தயாராக இருக்கிறது என் அவர் கூறினார். பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் கூறிய ‘துக்கடே துக்கடே கேங்க்‘ என்ற சிறு சிறு குழுவாக தனித்தனியாக இயங்கும் காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில் எவ்வளவு இடங்கள் ஜெயிக்குமோ அதைவிட அதிக இடங்கள் கன்னியாகுமரியில் பாரதிய ஜனதா வெற்றிபெற வேண்டும்.

    குமரி மாவட்டத்தில் பாரதிய ஜனதாவின் 2 வேட்பாளர்கள் வெற்றிப்பெற்று சான்றிதழ் வாங்கியுள்ளார்கள். அவர்களை வாழ்த்துகிறேன். உள்ளாட்சியில் சீட் கிடைக்காதவர்களும் வேட்பாளர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்து 8 மாதம் ஆகியுள்ளது. ஆனால், 80 ஆண்டுகால ஆட்சியில் உள்ள கோபம் மக்களிடம் உள்ளது.

    ஸ்டாலின் பேசுவது ஒன்று செய்வது ஒன்றாக உள்ளது. அமைச்சர்கள் ஊழல்வாதியாக மாறிவிட்டனர். 8 மாதத்தில் மக்கள் நலத் திட்டம் எதையும் அவர் செய்யவில்லை. 517 வாக்குறுதிகள் கொடுத்தவர் 10 வாக்குறுதியை கூட செயல்படுத்த முடியாத கையாலாகாத அரசாக உள்ளது. கையாலாக தன்மையை மறைக்க மத்திய அரசை வம்புக்கு இழுக்கிறார்கள்.

    நீட் மசோதாவை இரண்டாவது முறையாக ஆளுநருக்கு அனுப்ப இன்று சட்டசபை கூடியுள்ளது. நீட் தேர்வு மூலமாக ஏழை மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் படிக்க இடம் கிடைத்துள்ளது. நீட் மூலம் சமூக நீதி அனைத்து மக்களுக்கும் கிடைத்துள்ளது.

    தஞ்சை லாவண்யா இறப்பின்போது தி.மு.க பெயருக்கு கூட இரங்கல் செய்தி அனுப்பவில்லை. எந்த மதத்தில் யார் பிறந்திருந்தாலும் அவர்களை மதிக்கக்கூடியது பாரதிய ஜனதா சென்னையில் இஸ்லாமியர்கள் வேட்பாளராக அமர்ந்திருக்கிறார்கள். இங்கு கிறிஸ்தவ வேட்பாளர்கள் இருக்கிறார்கள்.

    தேசியத்தையும், ஆன்மீகத்தை ஏற்றுக் கொள்ளக்கூடியவர்கள் பாரதிய ஜனதாவில் இணைகிறார்கள். தி.மு.கவின் ஆணவத்தை தடுத்து நிறுத்தும் வகையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டும்.

    மக்களுக்கு எதிரான செயல்பாட்டை சுட்டிக்காட்டவும், திருந்துங்கள் அல்லது திருத்தப்படுவீர்கள் என ஆட்சியாளர்களுக்கு சொல்லவும் இந்த தேர்தலில் நாம் வெற்றிபெற வேண்டும். இந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்று தமிழக சரித்திரத்தை மாற்ற வேண்டும்.

    1967-ல் தமிழகத்தில் இருந்து துரத்தப்பட்ட கட்சி ஐ.சி.யுவில் படுத்துக்கொண்டு திமுக என்ற ஆக்ஸிஜனை சுவாசித்துக்கொண்டு நிற்கிறது. குமரியில் காங்கிரசுக்கு இடம் இல்லை என்று காட்டிவிட்டால். இந்தியாவில் எங்குமே இடம் இல்லை என்று ஆகிவிடும்.

    இந்தியாவில் இருந்து துரத்தப்பட்ட ராகுல் காந்தி, அமேதியில் இருந்தும் துரத்தப்பட்டார். பின்னர் கேரளத்தின் வயநாட்டுக்கு வந்தார். இனி தமிழ்நாட்டுக்கு வர போகிறார். அவரை தமிழகத்தில் வரவிடாமல் தடுக்க வேண்டும்.

    எப்போதும் ராகுல்காந்தி பேசுவதற்கு எதிர்மாறாகத்தான் நடந்துகொண்டிருக்கிறது. பாராளுமன்றத்தில் பேசும்போது தமிழகத்தில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வரமுடியாது என கூறியுள்ளார். இதைத்தான் நாங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்தோம். அவர் சொல்லிய மறுநாளே கமுதி மற்றும் குமரி மாவட்டத்தில் 3 வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றிபெற்றுள்ளனர்.

    21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய சக்தி செல்போன். சமூக வலைத்தளம் ஒரு பிம்பத்தை கட்டமைக்க வல்லது. உங்கள் பணியை வீடியோ, போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யுங்கள். தமிழகத்தின் 74 சதவீதம் மக்கள் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளத்தில் உள்ளனர். சமூக வலைத்தளங்களில் இல்லாதவர்கள் தங்களுக்கு உதவியாக ஒருவரை வைத்து சமூக வலைதளங்களில் செயல்படுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் மாநிலச் செயலாளர் உமாரதிராஜன் மாவட்ட தலைவர் தர்மராஜ் முன்னாள் எம்.பி.சசிகலாபுஷ்பா, மாவட்ட பார்வையாளர் கட்டளை ஜோதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

    குமரி மாவட்டத்தில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் இதில் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×