என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு (Tamil Nadu)
X
சென்னையில் 4 சிறுமிகளுக்கு கொடூரமான பாலியல் சித்ரவதை - திடுக்கிடும் தகவல்
Byமாலை மலர்30 Jan 2022 12:08 PM IST (Updated: 30 Jan 2022 12:08 PM IST)
சென்னையில் 4 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திரிபுரா மாநிலம் சிவஜலா பகுதியை சேர்ந்தவர் சலீமா கதூன் (வயது 38). இவர் தனது பகுதியில் உள்ள சிறுமிகளை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அழைத்து சென்று வேலை வாங்கிக் கொடுப்பதாக கூறி வந்தார்.
சிவஜலா பகுதியில் 17 வயது சிறுமி ஒருவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த சிறுமி ஏற்கனவே திருமணமாகி குழந்தை பெற்ற பிறகு கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
அந்த 17 வயது சிறுமியின் ஏழ்மையை கவனித்த சலீமா கதூன், ஆசை வார்த்தைகள் சொல்லி அந்த சிறுமியை ஏமாற்றினார். பெங்களூரில் அழகு நிலையத்தில் நல்ல வேலை காலியாக இருக்கிறது. அங்கு சென்றால் கை நிறைய சம்பாதிக்கலாம் என்று கூறினார்.
அதை உண்மை என்று நம்பிய 17 வயது சிறுமி, பெங்களூருக்கு வருவதற்கு சம்மதித்தார். இதற்கிடையே சலீமா கதூன் 16, 15, 14 வயதுடைய மேலும் 3 சிறுமிகளிடம் வேலை வாங்கி தருவதாக கூறி இருந்தார். அந்த 4 சிறுமிகளின் பெற்றோர்களுக்கு முன்பணமாக தலா ரூ.13 ஆயிரம் கொடுத்துவிட்டு ரெயிலில் பெங்களூருக்கு அழைத்து வந்தார்.
பெங்களூரில் சில நாட்கள் தங்கியிருந்த பிறகு அந்த 4 சிறுமிகளிடமும், ‘‘சென்னையில் முகப்புருவம் அழகு படுத்துவதில் நிபுணர்கள் உள்ளனர். அவர்களிடம் நீங்கள் பயிற்சி பெற்றால், உங்களுக்கு கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது’’ என்று கூறினார்.
இதை கேட்ட அந்த 4 அப்பாவி சிறுமிகளும் சென்னை வருவதற்கு சம்மதித்தனர். அவர்களை கடந்த 17-ந்தேதி சலீமா கதூன் பெங்களூரில் இருந்து ரெயிலில் சென்னைக்கு அழைத்து வந்தார்.
சென்னை கேளம்பாக்கம் படூரில் உள்ள ஒரு இடத்துக்கு 4 சிறுமிகளையும் சலீமா அழைத்து சென்றார். 4 பேரையும் அலாவுதின், மைனுதின், அன்வர் உசைன் ஆகியோரிடம் ஒப்படைத்தார். அந்த 4 சிறுமிகளிடமும் அன்வர் உசைன், மைனுதின், அலாவுதின் கடுமையாக நடந்து கொண்டனர்.
படூரில் தனியாக ஒரு வீடு எடுத்து 4 சிறுமிகளையும் அங்கு தங்க வைத்தனர். அந்த சிறுமிகள் எதற்காக இங்கு எங்களை தங்க வைத்து இருக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்கள். இதனால் முதல் நாளே அவர்களுக்கு அடி-உதை விழுந்தது.
மறுநாள் அந்த 4 சிறுமிகளையும் அவர்கள் விபசாரத்தில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தினார்கள். அப்போதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டு இருப்பதை அந்த 4 சிறுமிகளும் உணர்ந்து கொண்டனர். விபசாரத்தில் ஈடுபட அந்த 4 சிறுமிகளும் மறுத்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அன்வர் உசைன், அலாவுதின், மைனுதின் 3 பேரும் அந்த 4 சிறுமிகளையும் சித்ரவதை செய்தனர். பாலியல் ரீதியாகவும் அவர்களுக்கு துன்புறுத்தல் கொடுக்கப்பட்டது. பின்னர் அந்த 4 சிறுமிகளையும் தனித்தனியாக பிரித்தனர்.
2 சிறுமிகள் ஒரு வீட்டிலும், மற்ற 2 சிறுமிகள் மற்றொரு வீட்டிலும் தங்க வைக்கப்பட்டனர்.
இதற்கிடையே 4 சிறுமிகளும் தப்பி ஓடிவிடக்கூடாது என்ற பயத்தில் அவர்களை ஆபாசமாக வீடியோ மற்றும் போட்டோக்கள் எடுத்தனர். ‘‘நீங்கள் தப்பி சென்றால் இந்த படங்களை, வீடியோ காட்சிகளை சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவோம்’’ என்று மிரட்டினார்கள். மேலும் தினமும் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்தனர்.
தினம், தினம் அவர்களுக்கு பாலியல் ரீதியாக சித்ரவதை அதிகரித்தது. தினமும் இரவு அவர்களை பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து சென்று அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினார்கள். கடந்த 26-ந் தேதி குடியரசு தினத்தன்று இரவு நேர ஊரடங்கு இருந்த சமயத்திலும் அவர்கள் 4 சிறுமிகளையும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக தெரிகிறது.
26-ந்தேதி 4 சிறுமிகளும் நள்ளிரவில் ஆட்டோக்களில் வலுக்கட்டாயமாக அழைத்து செல்லப்பட்டதை படூர் பகுதியை சேர்ந்த சிலர் பார்த்தனர். இது குறித்து அவர்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக கேளம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் இருந்து 4 போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு 4 சிறுமிகள் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதை பார்த்தனர். ஆனால் அந்த சிறுமிகளை மீட்கும் முயற்சிகளில் போலீசார் ஈடுபடவில்லை.
மாறாக அந்த சிறுமிகளை பாலியல் ரீதியாக சித்ரவதை செய்தவர்களிடம் குறிப்பிட்டத் தொகையை வாங்கிக் கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவர்கள் திரும்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
சென்னையில் போலீசார் கண்டுபிடித்துவிட்டதால் இனி கேளம்பாக்கம் பகுதியில் தொழில் செய்ய இயலாது என்பதை அன்வர் உசைன், மைனுதின், அலாவுதின் மூவரும் உணர்ந்தனர். எனவே 4 சிறுமிகளையும் மீண்டும் பெங்களூருக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்தனர். இதற்காக அவர்களை கேளம்பாக்கத்தில் இருந்து பூக்கடை பகுதிக்கு அழைத்து வந்தனர்.
அங்கு அவர்களை ஒரு விடுதியில் தங்க வைத்தனர். அப்போதும் பாலியல் ரீதியாக சித்ரவதை தொடர்ந்தது. தங்களை எங்கோ கடத்தி செல்கிறார்கள் என்று 4 சிறுமிகளும் உணர்ந்தனர்.
இந்தநிலையில் 4 சிறுமிகளையும் அழைத்து செல்ல பெங்களூரில் இருந்து ஒரு பெண் வந்திருந்தார். அந்த பெண் 4 சிறுமிகளையும் ரெயிலில் அழைத்து செல்ல ஏற்பாடு செய்தார். அப்போது சிறுமிகளுக்கும், அந்த பெண்ணுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு 4 சிறுமிகளில் ஒரு சிறுமி அங்கிருந்து தப்பினார். லாட்ஜில் இருந்து வெளியேறிய அந்த சிறுமி அந்த பகுதியில் குடியரசு தின பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த போலீசாரை அணுகி தனக்கு ஏற்பட்டு இருக்கும் ஆபத்தை தெரிவித்தார்.
உடனடியாக ரோந்து போலீசார், பூக்கடை போலீசாருக்கு இதுபற்றி தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் பூக்கடை போலீசார் அந்த விடுதிக்கு விரைந்து வந்தனர். அங்கிருந்த 4 சிறுமிகளையும் பத்திரமாக மீட்டனர்.
ஆனால் போலீசாரைக் கண்டதும் அந்த பெண் தப்பி ஓடிவிட்டார். மீட்கப்பட்ட 4 சிறுமிகளிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது தான் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன.
4 சிறுமிகளையும் சென்னையை சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட தொகை கொடுத்து வாங்கியதாக தெரிகிறது. அந்த தொகையை சம்பாதிக்கும் வகையில் 4 சிறுமிகளையும் அவர்கள் மனிதாபிமானம் இல்லாமல் சித்ரவதை செய்துள்ளனர்.
தினமும் ஒவ்வொரு சிறுமியும் ரூ.50 ஆயிரம் சம்பாதித்து தர வேண்டும் என்று அவர்கள் இலக்கு நிர்ணயித்து பாலியல் துன்புறுத்தல் செய்ததாக தெரிய வந்தது. ஒவ்வொரு நாளும் இரவு 7 மணி முதல் மறுநாள் அதிகாலை வரை அந்த சிறுமிகளை அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளனர்.
ஒவ்வொரு நாளும் இரவில் தலா 6 பேர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சிறுமிகளை 3 பேரும் அடித்து துன்புறுத்தி இருக்கிறார்கள். இந்த தகவல்களை கேட்ட போலீசார் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
இதற்கிடையே இதுதொடர்பாக குழந்தைகள் நல கமிட்டி உறுப்பினர் லலிதாவுக்கு தகவல் தெரிய வந்தது. அவர் அந்த 4 சிறுமிகளிடமும் பேசி நடந்த சம்பவங்களை அறிந்தார். அப்போதுதான் தங்களை 3 பேரும் ஆபாச படம் பிடித்து மிரட்டி தினம் தினம் சித்ரவதை செய்தனர் என்பதை தெரிவித்தனர்.
குழந்தைகள் நல கமிட்டி உறுப்பினர் லலிதா தீவிரமாக விசாரித்த போது தான் 14 வயது சிறுமி இன்னமும் பெரியவள் கூட ஆகவில்லை என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. இது குறித்து அவர் போலீசில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டம், ஆள் கடத்தல் சட்டம், தனி நபர் உரிமை மீறல் சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிறுமிகளை ஏமாற்றிக் கடத்தி வந்த சலீமா கதூன், அந்த சிறுமிகளை பாலியல் ரீதியாக சித்ரவதை செய்து, பிறகு பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய அன்வர் உசைன், மைனுதின், அலாவுதின் ஆகிய 4 பேரையும் தேடி வருகிறார்கள்.
4 சிறுமிகளும் விசாரணைக்கு பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X