search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    .
    X
    .

    சேலம் மாவட்டத்தை சேர்ந்த 58 மாணவ- மாணவிகளுக்கு மருத்துவ படிப்பு உள்ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தது

    உள் இடஒதுக்கீட்டில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 58 மாணவ-மாணவிகளுக்கு அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது.
    சேலம்:

    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு நீட்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. 

    அதில் தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு தமிழக அரசு சார்பில் கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது.

    2021-ம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் சேலம் மாவட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ- மாணவிகள்  தேர்ச்சி பெற்றிருந்தனர்.  
    இந்த நிலையில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டு பிரிவுக்கான மருத்துவ படிப்பு கலந்தாய்வு நேற்று சென்னையில் தொடங்கியது. 

    இதில் சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் அதிக  மதிப்பெண்கள் பெற்ற மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    அதன்படி சேலம் மாவட்டத்தை சேர்ந்த 58 மாணவ- மாணவிகள் நேற்று நடைபெற்ற முதல் நாள் கலந்தாய்வில் மருத்துவ படிப்புக்கு தேர்வு பெற்று உள்ளனர். 

    இவர்கள் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மற்றும் நாமக்கல், தருமபுரி, கோவை, திருச்சி, சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தனர்.

    தொடர்ந்து இன்றும் கலந்தாய்வு நடப்பதால் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மேலும் பலருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×