search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குடியரசு தின அலங்கார ஊர்தி முன்பு பரதநாட்டிய கலைஞர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்த காட்சி.
    X
    குடியரசு தின அலங்கார ஊர்தி முன்பு பரதநாட்டிய கலைஞர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்த காட்சி.

    கோவையில் காட்சிப்படுத்தப்பட்ட குடியரசு தின அலங்கார ஊர்தியை காண பொதுமக்கள் ஆர்வம்

    அலங்கார ஊர்தி வருகையை முன்னிட்டு கோவை வ.உ.சி மைதானத்தில் நேற்று மாலை பரதநாட்டியம், பறை இசைகள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    கோவை:

    டெல்லி குடியரசு தினவிழா அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்திகளுக்கு இந்த முறை அனுமதி மறுக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் அனுமதி மறுக்கப்பட்ட 3 அலங்கார ஊர்திகளும் கலந்து கொண்டன.

    இந்த 3 ஊர்திகளும் தமிழகம் முழுவதும் வலம் வரும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அந்த ஊர்திகள் கோவை, மதுரை, ஈரோடு நகரங்களுக்கு தனித்தனியாக அனுப்பி வைக்கப்பட்டன.

    வ.உ.சி மற்றும் தலைவர்கள் உருவங்களுடன் அமைக்கப்பட்ட அலங்கார ஊர்தி சென்னையில் இருந்து நேற்று மாலை கோவை வந்தது. வழிநெடுக பொதுமக்கள் மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து வ.உ.சி மைதானத்திற்கு ஊர்தி கொண்டு வரப்பட்டது.

    இந்த ஊர்தியில் மகாகவி பாரதியார், வ.உ.சிதம்பரனார், தியாகி சுப்பிரமணிய சிவா, சேலம் விஜயராகவாச்சாரி உள்பட சுதந்திரப் போராட்ட வீரர்களின் உருவச்சிலை மற்றும் கப்பலோட்டிய தமிழன் வ.உ சிதம்பரனார் பெருமை சேர்க்கும் வகையில் அவர் இயக்கிய கப்பல் மற்றும் அவர் கோவை மத்திய சிறையில் இழுத்த செக்கு போன்றவை இடம் பெற்றிருந்தன. பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு அலங்கார ஊர்தியை பார்வையிட்டு ரசித்தனர். பலர் ஆர்வ மிகுதியில் ஊர்தி முன்பு நின்று செல்பியும் எடுத்துக் கொண்டனர்.

    அலங்கார ஊர்தி வருகையை முன்னிட்டு கோவை வ.உ.சி மைதானத்தில் நேற்று மாலை பரதநாட்டியம், பறை இசைகள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பரத நாட்டிய பள்ளிகள், இசை பள்ளிகள் சார்பாக 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், இளைஞர்கள் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சியை நடத்தினர்.

    இன்று 2-வது நாளாக அலங்கார ஊர்தி பொதுமக்கள் பார்வையிடுவதற்காக காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இன்றும் ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து அலங்கார ஊர்தியை கண்டு ரசித்தனர்.

    இந்த ஊர்தி வருகிற 31-ந்தேதி வரை வ.உ.சி. மைதானத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை பார்வையிடலாம். தினசரி மாலை 5 மணி முதல் 6 மணி வரை சுதந்திரப் போராட்ட வீரர்களைப் போற்றும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    இதுகுறித்து அலங்கார ஊர்தியை பார்வையிட வந்தவர்கள் கூறியதாவது:-

    டெல்லியில் குடியரசு தின விழா அணி வகுப்பில் நடைபெறும் தமிழகத்தின் ஊர்தியை இதுவரை தொலைக்காட்சியில் தான் பார்த்துள்ளோம். முதல் முறையாக நேரில் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழக அரசு இதுபோல ஆண்டுதோறும் அலங்கார ஊர்தியினை அனைத்து ஊர்களுக்கும் அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×