search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வால்பாறை காடாம்பாறை காப்பு காட்டிற்குள் விடப்பட்ட சிறுத்தையை படத்தில் காணலாம்.
    X
    வால்பாறை காடாம்பாறை காப்பு காட்டிற்குள் விடப்பட்ட சிறுத்தையை படத்தில் காணலாம்.

    திருப்பூரில் சிக்கிய சிறுத்தை வால்பாறை வனப்பகுதியில் விடப்பட்டது

    கடந்த 4 நாட்களாக விடிய விடிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு பல சிரமங்களுக்கிடையே சிறுத்தையை பிடித்து காட்டுக்குள் விட்ட வனத்துறை அலுவலர்களை திருப்பூர் பொதுமக்கள் பாராட்டினர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகில் உள்ள பாப்பாங்குளம் பகுதியில் கடந்த 24-ந்தேதி புகுந்த சிறுத்தை, சோளக்காட்டில் அறுவடை பணியில் ஈடுபட்டு இருந்த விவசாயிகள் உள்பட 4பேரை தாக்கியது. இதையடுத்து அதனை பிடிக்க சென்ற வனக்காவலர் மணிகண்டன் என்பவரை தாக்க முயன்றது.

    இதையடுத்து அங்கிருந்து தப்பிய சிறுத்தை திருப்பூர் பெருமாநல்லூர், பொங்கு பாளையம் பகுதியில் உள்ள வயல் பகுதிகளில் சுற்றி திரிந்தது. பொங்குபாளையம் பகுதியில் நாய் ஒன்றை கடித்துக்கொன்றது. தொடர்ந்து சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் சிறுத்தை வனத்துறையினர் பிடியில் சிக்காமல் 4 நாட்களாக போக்கு காட்டி வந்தது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

    இந்தநிலையில் நேற்று காலை திருப்பூர் மாநகர பகுதியான அம்மாபாளையம் அருகே தண்ணீர்பந்தல் எனும் இடத்தில் மக்கள் நெரிசல் மிக்க பகுதியில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றுக்குள் சிறுத்தை புகுந்தது. அந்த பகுதியில் தோட்ட வேலை செய்து கொண்டிருந்த ராஜேந்திரன் என்பவரை கடித்து குதறியதில் அவர் படுகாயமடைந்தார்.

    இதையறிந்த வேட்டை தடுப்பு காவலர் பிரேம்குமார் சிறுத்தை பதுங்கி இருக்கும் இடத்தை நோக்கி சென்றார். அப்போது அவரையும் சிறுத்தை தாக்கியது. இதில் லேசான காயத்துடன் அவர் சிறுத்தையிடம் இருந்து தப்பினார்.

    இதையடுத்து அம்மாபாளையம் பகுதியில் முகாமிட்ட வனத்துறை உள்ளிட்ட குழுவினர் சிறுத்தையை கண்காணித்து மயக்க ஊசியை செலுத்தினர். அதன்பின் சிறிது நேரத்தில் மயக்கமடைந்த சிறுத்தையை கூண்டிற்குள் அடைத்து எடுத்துச்சென்றனர்.

    மயக்கநிலையில் கூண்டில் ஏற்றப்பட்டு சிறுத்தையை வனப்பகுதியில் விடுவதற்காக வால்பாறை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. முன்னதாக சிறுத்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் சென்ற போது சிறுத்தைக்கு மயக்கம் தெளிந்து கூண்டுக்குள் அங்கும் இங்கும் ஓடியது.

    பின்னர் நேற்று இரவு சிறுத்தையை வால்பாறை காடாம்பாறை காப்பு காட்டிற்குள் விட்டனர். கூண்டை திறந்து விட்ட போது ஒரு சில நொடிகள் வெளியே வராமல் உள்ளேயே இருந்த சிறுத்தை, பிறகு சிறிது நேரத்தில் ஒரே பாய்ச்சலில் காட்டுக்குள் தாவிச்சென்றது.

    பிடிபட்ட சிறுத்தைக்கு 4 வயது இருக்கும். 70 கிலோ எடையுள்ள சிறுத்தை மிகவும் ஆரோக்கியமாக உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். 4 நாட்களாக விடிய விடிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு பல சிரமங்களுக்கிடையே சிறுத்தையை பிடித்து காட்டுக்குள் விட்ட வனத்துறை அலுவலர்களை திருப்பூர் பொதுமக்கள் பாராட்டினர்.
    Next Story
    ×