search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காங்கிரஸ்
    X
    காங்கிரஸ்

    கோவை மாநகராட்சி தேர்தல்- தி.மு.க. கூட்டணியில் 20 வார்டுகளில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ்

    தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய கட்சியான காங்கிரஸ் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் தங்களுக்கு குறைந்தது 20 வார்டுகளையாவது ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
    கோவை:

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு நாளை (28-ந் தேதி) வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது.

    தேர்தலில் போட்டியிட்டு மேயர், நகர சபை தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளை கைப்பற்ற ஆளும் கட்சியான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றன. இதற்காக ஏற்கனவே இந்த கட்சிகள் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்றன. மேலும் மனு அளித்தவர்களை நேரில் அழைத்து நேர்காணலும் நடத்தின.

    கோவை மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்பியவர்களிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நேர்காணல் நடத்தப்பட்டது. இதேபோல அ.தி.மு.க.வில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி முன்னிலையில் நேர்காணல் நடத்தப்பட்டது. இந்த 2 கட்சிகளிலுமே போட்டியிட விருப்பம் தெரிவித்து ஒவ்வொரு வார்டிலும் 5 பேர் முதல் 40 பேர் வரை மனு செய்துள்ளனர்.

    அவர்கள் நேர் காணல் செய்யப்பட்டு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதற்கு அடுத்தக்கட்டமாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த வேண்டியுள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை வார்டுகளை ஒதுக்குவது என்பது பற்றி தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுமே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

    கூட்டணி கட்சிகளுக்கு வார்டு ஒதுக்கப்பட்டதும் தாங்கள் போட்டியிடும் வார்டுகளின் வேட்பாளர்களை அறிவிக்க தி.மு.க., அ.தி.மு.க. முடிவு செய்துள்ளன. வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் பிப்ரவரி 4-ந் தேதி ஆகும். அதற்குள் கூட்டணி வார்டுகளை அறிவித்து தங்கள் வேட்பாளர்களையும் அறிவிக்கும் முனைப்பில் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.

    தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய கட்சியான காங்கிரஸ் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் தங்களுக்கு குறைந்தது 20 வார்டுகளையாவது ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. இதேபோல மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் தங்களுக்கு சில வார்டுகளை கேட்டு தி.மு.க. தலைமைக்கு நெருக்கடி கொடுத்துள்ளன.

    இதேபோல அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதாவும் கோவை மாநகராட்சியில் தங்களுக்கு 20 வார்டுகளை ஒதுக்க வேண்டும் என கேட்டுள்ளது. காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதாவுக்கு அவர்கள் கேட்கும் வார்டுகள் ஒதுக்கப்படுமா? என்பது பற்றி இன்று அல்லது நாளைக்குள் தெரிந்து விடும். அதன்பிறகு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கும்.


    Next Story
    ×