search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாறைபட்டியில் கண்டுபிடிக்கப்பட்ட நாயக்கர் கால வீரக்கற்கள்.
    X
    பாறைபட்டியில் கண்டுபிடிக்கப்பட்ட நாயக்கர் கால வீரக்கற்கள்.

    திண்டுக்கல் அருகே நாயக்கர் கால வீரக்கற்கள் கண்டுபிடிப்பு

    3 வீரக்கற்களிலும் உள்ள வீரர்களின் தலை அலங்காரம் அதாவது கொண்டை அமைப்பு நாயக்கர் காலத்திய கொண்டை அமைப்பான பக்கவாட்டில் சாய்ந்து முடித்து கட்டப்படும் அமைப்பை போல் உள்ளது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே ஆத்தூர் பாறைப்பட்டியில் உள்ள நடராஜ் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நாயக்கர் காலத்தை சேர்ந்த 3 வீரக்கற்கள் இருப்பதை நெல்லூர் அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் கருப்பையா, பேராசிரியர் மாணிக்கராஜ் ஆகியோர் கள ஆய்வில் கண்டறிந்தனர்.

    இந்த பகுதி பிற்காலப் பாண்டியர் காலமான கி.பி.13ம் நூற்றாண்டில் ஆற்றூர் நாட்டு பிரிவின் கீழ் இருந்து வந்துள்ளது. ராமநாதபுரம் சேதுபதிகள் நாயக்க மன்னர்களுக்கு படைகளைக் கொடுத்து உதவியுள்ளனர். அவர்கள் அனுப்பிய படைகள் இங்கு முகாமிட்டு இருந்ததால் இந்த ஊருக்கு பாறைப்பட்டி என்ற பெயர் உருவானது என்ற தகவலும் உள்ளது. மேலும் பெரிய பாறையை ஒட்டி உருவானதால் பாறைப்பட்டி என்ற பெயர் வந்ததாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

    இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க ஊரில் கி.பி. 17ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் 3 வீரக்கற்கள் உள்ளன. இந்த வீரக்கற்கள் 7 போர் வீரர்களின் வீர மரணத்தின் நினைவாக எடுக்கப்பட்டவை ஆகும். வீரக்கல் என்பது வீரம் காட்டி சண்டையிட்டு மடியும் வீரர்களின் நினைவாக எடுக்கப்படுவதாகும்.

    3 வீரர்களில் நடுவில் உள்ள வீரன் மட்டும் மற்ற 2 வீரர்களை விட உயரமான உருவமாக காட்டப்பட்டுள்ளது. இடப்பக்கமாக உள்ள கல்லில் 2 வீரர்களில் ஒருவர் தனது இடது கையில் உள்ள ஆயுதத்தை உயர்த்திப் பிடித்தும், வலது கையில் உள்ள ஆயுதத்தை தரையில் ஊன்றி நின்ற நிலையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள மற்றொரு வீரனும் கையில் ஆயுதங்களுடனும் காணப்படுகிறார். வலப்பக்கமாக உள்ள வீரக்கல்லிலும் வீரர்கள் ஆயுதங்களுடன் நின்ற நிலையில் சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

    3 வீரக்கற்களிலும் உள்ள வீரர்களின் தலை அலங்காரம் அதாவது கொண்டை அமைப்பு நாயக்கர் காலத்திய கொண்டை அமைப்பான பக்கவாட்டில் சாய்ந்து முடித்து கட்டப்படும் அமைப்பை போல் உள்ளது. அனைவரது முகங்கள், அணிகலன்கள், ஆயுதங்கள் சிதைந்தும் தேய்ந்தும் அடையாளம் காண முடியாத நிலையில் உள்ளன. வீரர்களின் இடையை சுற்றி உருண்டு திரண்ட வட்டமான கயிறு போன்ற ஒன்று கட்டப்பட்டிருக்கின்றது. இது கீழாடையின் இடை கட்டாக இருக்கலாம். இவ் வீரக்கல்லிற்கு வீரர்களின் சிற்ப அமைப்பு கம்பீரத்தை கொடுப்பது போல் அக்கற்களில் வெட்டப்பட்டுள்ள திருவாச்சி போன்ற அமைப்பு அழகை கொடுக்கும் விதமாக உள்ளது.

    இப்பகுதியில் அதிக அளவில் காணப்படும் இரும்பு கழிவுகள் இங்கு முகாமிட்டு இருந்த படை வீரர்கள் தங்களின் ஆயுதங்களை கூர்மையாக்க இரும்பு பட்டறைகள் அமைக்கப்பட்டிருக்கலாம் அல்லது இரும்பை உருக்கும் இரும்பு பட்டறைகள் அதிக அளவில் இருந்திருக்கலாம் என்றனர்.



    Next Story
    ×