search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தான் வாங்கிய பதக்கங்கள், பரிசுகளை தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு வந்த ஓவிய ஆசிரியர் சித்தேந்திரன்.
    X
    தான் வாங்கிய பதக்கங்கள், பரிசுகளை தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு வந்த ஓவிய ஆசிரியர் சித்தேந்திரன்.

    அரசு வேலை கேட்டு பதக்கங்கள், பரிசுகளை மூட்டை கட்டி தூக்கி வந்த ஓவிய ஆசிரியர்

    விளையாட்டு துறையில் சாதனை படைப்பவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை உள்ளது. ஆனால் கலை, இலக்கிய போட்டிகளில் சாதனை படைப்பவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது இல்லை.
    தேனி :

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டியை சேர்ந்தவர் சித்தேந்திரன். இவர், ஒரு தனியார் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தார். அப்போது அவர் இதுவரை வாங்கிய பதக்கங்கள், விருதுகள், பரிசு கேடயங்கள் ஆகியவற்றை மூட்டைகளில் கட்டி எடுத்து வந்தார். அவற்றை கலெக்டர் அலுவலக வளாகத்தில் அடுக்கி வைத்து காண்பித்தார். பின்னர் அவர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார்.

    அந்த மனுவில், "நான் எம்.எஸ்சி., பி.எட். படித்துள்ளேன். அரசு தொழில்நுட்ப தேர்வில் ஓவியத்திலும் முதுநிலை தேர்ச்சி பெற்றுள்ளேன். தேசிய, மாநில அளவிலும், பல்கலைக்கழக அளவிலும் கலை, இலக்கிய போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு பரிசுகள், விருதுகளை வாங்கி உள்ளேன். விளையாட்டு துறையில் சாதனை படைப்பவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை உள்ளது. ஆனால் கலை, இலக்கிய போட்டிகளில் சாதனை படைப்பவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது இல்லை. எனவே எனது கோரிக்கையை அரசு பரிசீலனை செய்து வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியிருந்தார்.
    Next Story
    ×