search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், ஊழியர்கள் 40 பேருக்கு கொரோனா

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றக் கூடிய முன்கள பணியாளர்களான டாக்டர்கள், நர்சுகள், மருத்துவமனை ஊழியர்கள் என மொத்தம் 40 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    கோவை:

    கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 100-க்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி வந்தது.

    ஆனால் நடப்பாண்டில் கொரோனா 3-வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. நாள் ஒன்றுக்கு தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. நேற்று ஒரே நாளில் புதிதாக 3,912 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 4 நாட்களில் மட்டும் கோவையில் 14 ஆயிரத்து 11 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கொரோனா தொற்றுக்கு ஆளாகி ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அரசு ஆஸ்பத்திரிகளில் 1500 படுக்கைகளுடன் சிறப்பு வார்டும் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு தனி மருத்துவக்குழுவினர் போடப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு தினந்தோறும் கோவை மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் காய்ச்சல் உள்பட பல்வேறு உடல் உபாதைகளுக்கு சிகிச்சை பெறுவதற்காக வந்து செல்கின்றனர். அப்படி வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் பலருக்கு தொற்று உறுதியாகி வருகிறது.

    இதற்கிடையே கடந்த சில நாட்களாகவே கோவையில் டாக்டர்கள், நர்சுகள், போலீசார், அரசு அதிகாரிகள் பலரும் தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக போலீசார் அதிகளவில் தொற்று பாதிக்கப்பட்டு வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றக் கூடிய முன்கள பணியாளர்களான டாக்டர்கள், நர்சுகள், மருத்துவமனை ஊழியர்கள் என மொத்தம் 40 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதுதவிர பெரும்பாலான டாக்டர்கள், ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலாவுக்கும் 2 நாட்களாக காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு, வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. பெரியளவில் பாதிப்புகள் இல்லை என்றாலும் கூட நிறைய பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர்.

    அவர்களும் விரைந்து குணமடைந்தும் விடுகின்றனர். அதன்படி டாக்டர்கள் மருத்துவ பணியாளர்கள் 40 பேர் தொற்று பாதிக்கப்பட்டு, வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர் என்றனர்.
    Next Story
    ×