search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ‘கான்கிரீட்’ டால் ஆன இணைப்பு பாலம் சரிந்து ஆற்றுக்குள் விழுந்து கிடப்பதை படத்தில் காணலாம்.
    X
    ‘கான்கிரீட்’ டால் ஆன இணைப்பு பாலம் சரிந்து ஆற்றுக்குள் விழுந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

    கொள்ளிடம் ஆற்றில் ரூ.100 கோடியில் கட்டப்படும் பாலம் சரிந்து விழுந்தது

    கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.100 கோடியில், தஞ்சை-விக்கிரவாண்டி இடையே கட்டப்பட்டு வரும் அணைக்கரை பாலம் சரிந்து விழுந்தது.
    தஞ்சாவூர்:

    தஞ்சை-கும்பகோணம்-விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வரை சாலைகள் குறுகலாகவும், சாலையின் ஒரங்களில் குடியிருப்புகளும் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, நீண்ட நேரம் பயணம் செய்ய வேண்டிய நிலை இருந்து வந்தது.

    இதனை தவிர்க்க விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி முதல் தஞ்சை வரையிலான 165 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலையை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் நான்கு வழிச்சாலையாக கடந்த 2006-ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது.

    போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுவதாலும், நேரம் வீணாகுவதை கருத்தில் கொண்டும் விபத்தில்லா சாலைகளை அமைக்கும் வகையில் மத்திய அரசு இந்த நான்கு வழிச்சாலைக்கு கடந்த 2010-ம் ஆண்டில் திட்ட மதிப்பீடு தயார் செய்தது.

    கடந்த 2015-ம் ஆண்டு விக்கிரவாண்டி-தஞ்சாவூர் நான்கு வழிச்சாலை மற்றும் வழியில் உள்ள பாலங்கள் அமைக்க முதல்கட்டமாக மத்திய அரசு ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. 2017-ம் ஆண்டு மொத்த தொகையான ரூ.3,517 கோடியை ஒதுக்கியது.

    கடந்த 2018-ம் ஆண்டு இந்த சாலை பணிகள் மூன்று பகுதிகளாக பிரித்து தொடங்கப்பட்டது. இதில் பின்னலூர், சேத்தியாதோப்பு, அணைக்கரை, திருப்பனந்தாள் என 16 கி.மீ. நீளத்துக்கு புறவழிச்சாலைகளும், ரூ.100 கோடியில் அணைக்கரை பாலம் உள்பட 34 ஆற்றுப்பாலங்களும், ஜெயங்கொண்டம் கூட்டு ரோடு, மீன்சுருட்டி, குமாரக்குடி, சோழகத்தரம் உள்ளிட்ட பகுதிகளில் 23 மேம்பாலங்களும், ஒரு சுங்கச்சாவடியும் அமைக்கப்பட்டு வருகிறது.

    தஞ்சை மாவட்டத்தை சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களுடன் இணைக்கும் வகையில் புதிதாக ரூ.100 கோடி மதிப்பீட்டில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே பழைய பாலத்திற்கு பதிலாக புதிதாக பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.

    இதனையடுத்து கொள்ளிடம் ஆற்றில் பாலம் அமைக்கும் பணி கடந்த சில வருடங்களாக இரவு, பகலாக நடந்து வருகிறது. இதற்காக ‘கான்கிரீட்’டால் ஆன பெரிய அளவிலான இணைப்பு பாலங்கள் தயார் செய்யப்பட்டு இந்த இணைப்பு பாலங்கள் ராட்சத கிரேன் மூலம் எடுத்து செல்லப்பட்டு இணைக்கும் பணிகள் நடந்து வந்தன.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை பாலத்தில் உள்ள 17-வது கண்ணில் இருந்து 18-வது கண்ணிற்கு 50 டன் எடையுள்ள கான்கிரீட்டால் ஆன இணைப்பு பாலம் ஒன்று ‘ஹைட்ராலிக் எந்திரம்’ பொருத்தப்பட்ட கிரேன் மூலம் எடுத்து செல்லப்பட்டு பொருத்தும் பணி நடந்தது.

    அப்போது கிரேனில் உள்ள ‘ஹைட்ராலிக் பிரஷர் எந்திரத்தில்’ ஏற்பட்ட கோளாறு காரணமாக கான்கிரீட்டால் ஆன இணைப்பு பாலம் சரிந்து ஆற்றுக்குள் விழுந்தது.

    தற்போது கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் செல்வதால் மேம்பாலத்தின் கீழ் புறத்தில் பணியாட்கள் யாரும் வேலை செய்யவில்லை. இதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

    மேம்பாலம் கட்டும் பணியின்போது ‘கான்கிரீட்’ டால் ஆன இணைப்பு பாலம் சரிந்து ஆற்றுக்குள் விழுந்த தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள், தனியார் கட்டுமான நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். நடந்த சம்பவம் தொடர்பாக அங்கு பணியில் இருந்தவர்களிடம் விசாரணை செய்தனர். முற்றிலும் ஹைட்ராலிக் எந்திர கோளாறு காரணமாகவே இந்த விபத்து நடந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அணைக்கரை அருகே மேம்பாலம் சரிந்து விழுந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    Next Story
    ×