search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    குமரி மாவட்டத்தில் கொரோனா 3-வது அலையில் 50 போலீசார் பாதிப்பு - தினசரி தொற்று 560 ஆனது

    கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 64 ஆயிரத்து 286 ஆக அதிகரித்துள்ளது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.

    நேற்று மாவட்டம் முழுவதும் 4319 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 560 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து வந்த இரண்டு பேரும், கேரளாவிலிருந்து வந்த இரண்டு பேரும், தூத்துக்குடியில் இருந்து வந்த ஒருவரும், சென்னையிலிருந்து வந்த ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    பாதிக்கப்பட்ட 560 பேரில் 298 பேர் ஆண்கள், 233 பேர் பெண்கள், 29 பேர் குழந்தைகள் ஆவார்கள். நாகர்கோவில் நகரில் புதிய உச்சமாக 187 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 64 ஆயிரத்து 286 ஆக அதிகரித்துள்ளது. நாகர்கோவில் நகரில் வடசேரி, ராமன்புதூர், தளவாய்புரம் பகுதிகளில் கொத்துக் கொத்தாக பாதிப்பு உயர்ந்து வருகிறது. அந்த பகுதிகளில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் இருந்த பலரும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    பாதிக்கப்பட்ட பகுதியில் மாநகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினிகள் தெளிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள். அரசு அலுவலகங்கள் தனியார் அலுவலகங்கள் கடைகளில் பணிபுரியும் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    முதல், இரண்டு கொரோனா அலையின் போது 200க்கும் மேற்பட்ட போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். தற்பொழுது மாவட்டம் முழுவதும் மூன்றாவது அலை வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் நாகர்கோவில் ஆயுதப்படை போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த 11 போலீசாருக்கு முதலில் கொரோனா கண்டறியப்பட்டது.

    இதைத் தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. இதில் மேலும் 11 பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து 22 பேரும் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். ஒரு சிலர் இந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் தொடர்ந்து போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். குலசேகரம் பெண் இன்ஸ்பெக்டர் உட்பட ஐந்து போலீசாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து போலீஸ் நிலையத்தில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சக போலீசாருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது.மாவட் டம் முழுவதும் இதுவரை மூன்றாவது அலை தாக்குதலில் 50 போலீசார் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    வடசேரி பகுதியில் உள்ள பள்ளியில் மாணவர்கள்-ஆசிரியர்கள் 11 பேருக்கு தொற்று ஏற்பட்டதையடுத்து பள்ளியில் படித்த மாணவர்கள் ஆசிரியர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இதே போல் மாவட்டத்தில் உள்ள மற்ற பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா? என்பது குறித்தும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

    குமரி மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பொதுமக்கள் காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக பக்கத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அரசு ஆஸ்பத்திரிகளில் படுக்கைகளை தயார்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி, ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, கோணம் பாலிடெக்னிக் கல்லூரி உள்பட அனைத்து இடங்களிலும் கொரோனா சிகிச்சைக்கு படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.

    மேலும் தனியார் ஆஸ்பத்திரியிலும் படுக்கை வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப் பட்டு வீட்டு சிகிச்சையில் உள்ளவர்கள் மேல் சிகிச்சை தேவைப்பட்டால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை பெறுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    Next Story
    ×