search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாலமுருகன்
    X
    பாலமுருகன்

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடு முட்டி பார்வையாளர் பலி- 80 பேர் காயம்

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 25 காளைகளை அடக்கி அவனியாபுரத்தை சேர்ந்த கார்த்திக் என்ற வாலிபர் முதல் இடத்தை பிடித்தார். அவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
    அவனியாபுரம்:

    மதுரை அவனியாபுரத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். அதன்படி நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. கொரோனா விதிமுறைகள் காரணமாக 300 மாடுபிடி வீரர்கள், 700 காளைகள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.

    போட்டியை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஒரு சுற்றுக்கு 50 வீரர்கள்,100 காளைகள் என நிர்ணயிக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது. மொத்தம் 7 சுற்றுகளில் 568 காளைகள், 300 வீரர்கள் களம் இறங்கினர்.

    கொரோனா விதிமுறைகள் காரணமாக உள்ளூரை சேர்ந்த 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியை காண அனுமதி வழங்கப்பட்டது. மேலும் கொரோனா தடுப்பூசி 2 தவணை செலுத்திய வீரர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

    காலை 7.45 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில் மாடுபிடி வீரர்கள் 38 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 24 பேர், பார்வையாளர்கள் 18 பேர் என மொத்தம் 80 பேர் காயம் அடைந்தனர்.

    மேலும் போட்டியை வேடிக்கை பார்த்த தவமணி என்பவரின் மகன் பாலமுருகன்(வயது 18) மாடு முட்டி பலியானார். காயம் அடைந்தவர்களில் 21 பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரியிலும், மற்றவர்கள் அவனியாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் சிகிச்சை பெற்றனர்.

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 25 காளைகளை அடக்கி அவனியாபுரத்தை சேர்ந்த கார்த்திக் என்ற வாலிபர் முதல் இடத்தை பிடித்தார். அவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.

    19 காளைகளை அடக்கி 2-வது இடத்தை பிடித்த வலையங்குளம் முருகன் என்பவருக்கு மோட்டார் சைக்கிளும், 11 காளைகளை அடக்கி 3-வது இடத்தை பிடித்த விளாங்குடியை சேர்ந்த பரத்குமார் என்பவருக்கு பசுங்கன்றும் பரிசாக வழங்கப்பட்டது.

    சிறந்த காளைக்கான பரிசை மணப்பாறையை சேர்ந்த தேவசகாயம் என்பவரின் காளை பெற்றது. அவருக்கு மோட்டார் சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமி‌ஷனர் கார்த்திகேயன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
    Next Story
    ×