search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    மீனவர்கள்
    X
    மீனவர்கள்

    கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு- இலங்கை கடற்படையினர் மீது புகார்

    இலங்கை கடற்படையினர் தொடர்ந்து விரட்டியடித்து வருவதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ராமேசுவரம் மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.
    ராமேசுவரம்:

    கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடிப்பது மற்றும் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    ராமேசுவரம், மண்டபம் பகுதிகளை சேர்ந்த 55 மீனவர்களையும், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 14 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கடந்த மாதம் சிறை பிடித்தனர். இவர்கள் அனைவரும் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர்.

    இந்த நிலையில் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மண்டபம் பகுதியை சேர்ந்த 12 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்களில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மீதம் உள்ள 9 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பினர்.

    மற்ற மீனவர்கள் விடுவிக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம், மண்டபம், பாம்பன் பகுதிகளை சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி விரட்டியடித்தனர்.

    மேலும் மீனவர்களின் வலைகளை அறுத்து சேதப்படுத்தி உள்ளனர். சேதம் அடைந்த படகுகளுடன் பாதிக்கப்பட்ட மீனவர்கள் கடந்த 11-ந்தேதி ராமேசுவரத்திற்கு திரும்பினர். இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் ரூ.1 கோடி மதிப்பிலான மீன்பிடி சாதனங்கள் சேதமாகி உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீண்டும் விரட்டியடித்துள்ளனர். ராமேசுவரம் பகுதியில் இருந்து நேற்று 300-க் கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    அவர்கள் வழக்கம்போல் கச்சத்தீவு கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 10-க்கும் மேற்பட்ட ரோந்து படகில் இலங்கை கடற்படையினர் வந்துள்ளனர். அவர்கள் இந்த பகுதியில் மீன் பிடிக்க கூடாது என்று எச்சரித்துள்ளனர்.

    மேலும் ராமேசுவரம் மீனவர்களின் வலைகளை வெட்டி சேதப்படுத்தி அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர். இதையடுத்து சேதமடைந்த படகுகளுடன் மீனவர்கள் இன்று அதிகாலை ராமேசுவரத்திற்கு வந்து சேர்ந்தனர்.

    இலங்கை கடற்படையினர் தொடர்ந்து விரட்டியடித்து வருவதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ராமேசுவரம் மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.
    Next Story
    ×