search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ராமதாஸ்
    X
    ராமதாஸ்

    தமிழ்நாட்டில் டாஸ்மாக் பார்களை அதிகரிப்பதா?- ராமதாஸ் எதிர்ப்பு

    தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்துவதை நோக்கி தான் அரசு பயணிக்க வேண்டும். அதற்கு முரணாக குடிப்பகங்களின் எண்ணிக்கையை உயர்த்தக்கூடாது.


    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

    தமிழ்நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 7 ஆயிரத்திற்கும் கூடுதலான மதுக்கடைகளும், 4500-க்கும் அதிகமான பார்களும் இருந்தன. பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய அரசியல் மற்றும் சட்டப் போராட்டங்களின் காரணமாக அவற்றின் எண்ணிக்கை கடந்த ஜூலை 31- ம் தேதி நிலவரப்படி, முறையே 5,402 மதுக்கடைகள், 2,808 குடிப்பகங்களாக குறைந்தன. அவற்றிலும் இப்போது 5,387 மதுக்கடைகளும், 2,168 குடிப்பகங்களும் தான் செயல்பட்டு வருகின்றன. அவற்றுடன் கூடுதலாக 1551 குடிப்பகங்களுக்கும் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டிருக்கின்றன.

    மேற்கண்ட 1551 குடிப்பகங்களும் ஏற்கனவே சட்ட விரோதமாக செயல்பட்டு வந்தவை தான் என்றும், அவற்றை இப்போது சட்டப் பூர்வமாக்கும் நோக்கத்துடன் அவற்றுக்கும் உரிமம் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் விளக்கம் அளித்திருக்கிறார்.

    அமைச்சர் கூறுவதைப் போல 1,551 குடிப்பகங்கள் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்திருந்தால், அவற்றை நிரந்தரமாக மூடுவது தான் மக்கள் நல அரசுக்கு அழகும், அடையாளமும் ஆகும். இத்தகைய சூழலில் 1,551 புதிய குடிப்பகங்களை திறப்பது தமிழக அரசின் கொள்கை முடிவா? அல்லது அமைச்சரின் தனி முடிவா? என்பதை அரசு விளக்க வேண்டும். குடிப்பகங்கள் இல்லாத மதுக்கடைகளுடன் ஒப்பிடும் போது குடிப்பகங்களுடன் இணைக்கப்பட்ட மதுக் கடைகளில் அதிக அளவில் மது விற்பனை நடக்கிறது. அதனால், குடிப்பகங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மது வணிகத்தையும், அதனால் குடும்பங்கள் சீரழிவதையும், குற்றங்கள் பெருகுவதையும் அதிகரிக்கும். அது தவிர்க்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்துவதை நோக்கி தான் அரசு பயணிக்க வேண் டும். அதற்கு முரணாக குடிப்பகங்களின் எண்ணிக்கையை உயர்த்தக்கூடாது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×