search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கைது
    X
    கைது

    ஆசிரியர் வீட்டில் கைவரிசை: 50 பவுன் கொள்ளை வழக்கில் தம்பதி உள்பட 3 பேர் கைது

    திசையன்விளையில் ஆசிரியர் வீட்டில் 50 பவுன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து தம்பதி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள இடையன்குடி பழைய கோவில் தெருவை சேர்ந்தவர் சைமன்(வயது 68). ஓய்வு பெற்ற ஆசிரியர்.

    இவரது மகன்கள் டைட்டஸ், சைலஸ் வெளியூரில் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார்கள். புத்தாண்டு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

    நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டில் அனைவரும் பேசிக்கொண்டிருந்த போது மேல் மாடியில் உள்ள அறையில் இருந்த 50 பவுன் நகை மற்றும் ரூ..80 ஆயிரத்தை மர்மநபர் கொள்ளையடித்து சென்றார்.

    தொடர்ந்து அதே ஊரில் உள்ள தோப்பு தெருவை சேர்ந்த சுந்தர்சிங், பிளசிங் தெருவை சேர்ந்த ஜெபா, கோவில் தெருவை சேர்ந்த கோல்டன் டேனியல், பீட்டர் தெருவை சேர்ந்த ரமேஷ் ஆகியோர் வீடுகளிலும் மர்ம நபர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டார்.

    இதில் ரமேஷ் என்பவர் தனது வீட்டில் திருட முயன்ற அந்த மர்மநபரை இரும்பு கம்பியால் தாக்கி, பிடிக்க முயன்றார். ஆனால் அதற்குள் அந்த நபர் தப்பித்து ஓடிவிட்டார்.

    அந்த நபரின் உருவம் ரமேஷ் வீட்டு கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்தது. தலையில் துணியை போட்டுக்கொண்டும், இடுப்பில் பாவாடையை கட்டிக்கொண்டும் முகத்தை மறைக்காமல் அந்த நபர் சாதாரணமாக கொள்ளையடிக்க வந்த காட்சி அதில் பதிவாகி இருந்தது.

    இந்த கொள்ளை சம்பவம் குறித்து உவரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. உடனடியாக இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். நெல்லையில் இருந்து கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை பதிவு செய்தனர்.

    சி.சி.டி.வி. காட்சி பதிவை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதே நேரத்தில் சம்பவம் நடந்த நாளில் அந்த பகுதியில் உள்ள ஆனைகுடி விலக்கில் சந்தேகத்திற்கு இடமாக ஒரு மினி லோடு ஆட்டோ நின்று கொண்டிருந்தது.

    அதனை போலீசார் பறிமுதல் செய்து அதில் உள்ள முகவரியை வைத்து விசாரித்தனர். அதில் தென்காசி மாவட்டம் தாட்டான்பட்டியை சேர்ந்த ஆபிரகாம் என்பவரது மகன் பெஞ்சமின்(வயது 34) என்பவருடைய வாகனம் தான் அது என்பது தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசார் அவரை பிடித்து விசாரித்த போது, ஆசிரியர் சைமன் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்தது அவர்தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை செய்ததில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

    பெஞ்சமின் தனது தந்தை ஆபிரகாம்(65),மனைவி காளீஸ்வரி(வயது 30), சகோதரர் ஈசாக்(31) மற்றும் தனது 2 குழந்தைகள் ஆகியோருடன் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு உவரியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளார். பின்னர் அங்கு கூலி வேலை செய்து வந்த அவர்கள் அங்குள்ள வீடுகளை நோட்டமிட்டு கைவரிசை காட்டி உள்ளார். இந்த கொள்ளையில் அவரது மனைவி, சகோ தரரும் உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரியவந்தது.

    இதேபோல் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மதுரையில் வீடு எடுத்து தங்கி, அங்கு சுமார் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் நகை, பணத்தை கொள்ளையடித்ததும் விசா ரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் காளீஸ்வரி மற்றும் ஈசாக்கை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆசிரியர் வீட்டில் கொள்ளையடித்த நகை மற்றும் பணத்தை மீட்டனர். அவர்களுக்கு வேறு ஏதேனும் திருட்டு சம்பவங்களில் தொடர்பு இருக்கிறதா?மதுரையில் கொள்ளையடித்த பொருட்களை என்ன செய்தார்கள்? என்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெஞ்சமின், அவரது மனைவி ஆகிய 2 பேரும் கைதானதால் அவர்களது 2 குழந்தைகளையும் போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். 

    Next Story
    ×