என் மலர்

    தமிழ்நாடு

    13 நாட்களுக்கு பிறகு கடலுக்கு செல்லும் ராமேசுவரம் மீனவர்கள்
    X
    13 நாட்களுக்கு பிறகு கடலுக்கு செல்லும் ராமேசுவரம் மீனவர்கள்

    போராட்டம் வாபஸ்: 13 நாட்களுக்கு பிறகு கடலுக்கு செல்லும் ராமேசுவரம் மீனவர்கள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நடந்து வரும் வேலைநிறுத்தம் மற்றும் நாளை நடைபெற இருந்த ரெயில் மறியல் போராட்டம் ஆகியவற்றை வாபஸ் பெறுவதாக மீனவ சங்கங்களின் நிர்வாகிகள் அறிவித்தனர்.
    ராமேசுவரம்:

    கச்சத்தீவு அருகே கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம், மண்டபம் மற்றும் ஜெகதாபட்டி னத்தைச் சேர்ந்த 68 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. மேலும் மீனவர்களின் 11 விசைப்படகுகளை பறிமுதல் செய்தது.

    சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கை தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது விசைப்படகுகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி ராமேசுவரம் மற்றும் மண்டபம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரத போராட்டத்தையும் நடத்தினர். ராமேசுவரம் மீனவர்கள் கடந்த 20-ந்தேதி முதல் கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ராமேசுவரத்தில் மீன்வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    மீனவர்கள் மற்றும் கடல் தொழிலை நம்பி உள்ள தொழிலாளர்கள் வேலையின்றி இருந்து வந்தனர். தமிழக மீனவர்களை விடுவிக்கும் வரை தங்களது வேலைநிறுத்தம் தொடரும் என ராமேசுவரம் மீனவர்கள் அறிவித்திருந்தனர்.

    மீனவர்கள் விடுவிக்கப்படாவிட்டால் நாளை (1-ந்தேதி) தங்கச்சிமடத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என மீனவ சங்கங்கள் கூறியிருந்தன. இந்நிலையில் அனைத்து விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் ராமேசுவரத்தில் நேற்று சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், மீன்வளத்துறை துணை இயக்குநர் காத்தவராயன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    அனைத்து விசைப்படகு மீனவர் சங்க தலைவர் சேசுராஜா தலைமையில் ராமேசுவரம் விசைப்படகு மீனவர்களின் பல்வேறு சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். வருகிற 10-ந்தேதிக்குள் மீனவர்களை டெல்லிக்கு அழைத்து சென்று வெளியுறவுத்துறை மந்திரி மற்றும் மீன்வளத்துறை மந்திரியை சந்திக்க தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்படும், இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த மீனவர்களை விடுவிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து தற்போது நடந்து வரும் வேலைநிறுத்தம் மற்றும் நாளை நடைபெற இருந்த ரெயில் மறியல் போராட்டம் ஆகியவற்றை வாபஸ் பெறுவதாக மீனவ சங்கங்களின் நிர்வாகிகள் அறிவித்தனர்.

    இதையடுத்து ராமேசுவரம் மீனவர்கள் 13 நாட்களுக்கு பிறகு வருகிற 3-ந்தேதி முதல் கடலுக்கு செல்ல உள்ளனர். மீண்டும் கடலுக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×