search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    புத்தாண்டு
    X
    புத்தாண்டு

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் புத்தாண்டு பாதுகாப்புக்கு 5 ஆயிரம் போலீசார் குவிப்பு

    புத்தாண்டு பாதுகாப்புக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் 1,500 போலீசாரும், நெல்லை மாவட்டத்தில் 1,500 போலீசாரும், தென்காசி மாவட்டத்தில் 1,500 போலீசாரும், நெல்லை மாநகரில் 500 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
    நெல்லை:

    நாளை நள்ளிரவு 2022 புத்தாண்டு பிறக்கிறது. இந்தாண்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களிலும் இந்தாண்டு புத்தாண்டு கொண்டாட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரை பகுதிகள், பிரபல ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபினவ் உத்தரவின் பேரில் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் மேற்பார்வையில், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட உத்தரவிடப்பட்டுள்ளது.

    நெல்லை மாநகர பகுதிகளில் போலீஸ் கமி‌ஷனர் செந்தாமரைக் கண்ணன் உத்தரவின் பேரில் நாளை இரவு முதல் 1-ந் தேதி காலை வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போட உத்தரவிடப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் 1,500 போலீசாரும், நெல்லை மாவட்டத்தில் 1,500 போலீசாரும், தென்காசி மாவட்டத்தில் 1,500 போலீசாரும், நெல்லை மாநகரில் 500 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் உள்ள முக்கிய நகர்பகுதிகள், மக்கள் கூடும் இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.

    நாளை மாலை முதல் மறுநாள் காலை வரை விடிய விடிய வாகன சோதனைகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீதும், ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேருக்கு மேல் பயணம் செய்தாலும், அதிவேகமாக வாகனங்களில் சென்றாலும், முறையான ஆவணங்கள் இல்லாவிட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    பொது இடங்களில் அமைதியை குலைக்கும் வகையில் சத்தம் போட்டு கூச்சலிட்டாலோ, குடித்து விட்டு ரகளையில் ஈடுபட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    பிரபல ஓட்டல்களில் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவு விருந்து மற்றும் பாட்டு கச்சேரி நடத்தவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. தங்கும் விடுதிகளிலும் மொத்தமாக கூடி புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓட்டல்கள் இரவு 11 மணிக்கு மேல் கண்டிப்பாக மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகள், செங்கோட்டை பகுதியில் உள்ள அருவிகளுக்கும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குளிப்பதற்கும் அனுமதி கிடையாது.

    நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, களக்காடு தலையணை அருவி ஆகியவற்றுக்கும் சென்று குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு நாளை (31-ந் தேதி) முதல் 2-ந் தேதி வரை அமலில் இருக்கும்.

    தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் இதுகுறித்து கூறியதாவது:-

    தூத்துக்குடி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 1,500 போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தபடுகிறார்கள். தூத்துக்குடி, தருவைகுளம், வேம்பார், திருச்செந்தூர், மணப்பாடு ஆகிய அனைத்து கடற்கரை பகுதிகளிலும் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மது குடித்து விட்டு வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து ஓட்டல்களையும் நாளை இரவு 11 மணிக்குள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. நாளை இரவு முதல் மறுநாள் காலை வரை தொடர்ந்து வாகன சோதனை நடத்தவும், முக்கிய பகுதிகளில் போலீசார்கள் விடிய விடிய கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.


    Next Story
    ×