search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முன்னாள் அமைச்சர் தங்கமணி
    X
    முன்னாள் அமைச்சர் தங்கமணி

    தங்கமணி உறவினர், நண்பர்கள் வீடுகளில் மீண்டும் அதிரடி சோதனை- ஆவணங்களை காண்பித்து தீவிர விசாரணை

    ஈரோட்டில் 3 இடங்களில் தங்கமணியின் உறவினர்கள் வீடுகளில் இன்று காலை முதல் மீண்டும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
    பள்ளிப்பாளையம்:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான தங்கமணி கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 23-ந்தேதி முதல் கடந்த ஆண்டு மே மாதம் 6-ந் தேதி வரை பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருமானத்துக்கு அதிகமாக ரூ.4 கோடியே 85 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கி குவித்ததாக வந்த புகாரை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்தது.

    இதையடுத்து தங்கமணிக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள், கட்டுமான ஒப்பந்ததாரர்கள் வீடுகள், அலுவலகங்கள், கல்குவாரிகள் என அவருக்கு தொடர்புடைய 69 இடங்களில் கடந்த 15-ந்தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். இதில் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள கோவிந்தம்பாளையத்தில் இருக்கும் அவரது வீட்டில் மட்டும் சுமார் 14½ மணி நேரம் சோதனை நடத்தப்பட்டது.

    69 இடங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் ரூ.2 கோடியே 37 லட்சத்து 34 ஆயிரத்து 458 ரொக்கம், 1.130 கிலோ தங்க நகைகள், 40 கிலோ வெள்ளி மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் கணக்கில் வராத பணம் ரூ. 2 கோடியே 16 லட்சத்து 37 ஆயிரம் ஆகும். செல்போன், பல வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

    இந்த ஆவணங்களின் அடிப்படையில் இன்று தங்கமணிக்கு தொடர்புடைய ஆதரவாளர்கள் வீடுகள், அலுவலகங்களில் 2-ம் கட்ட சோதனை நடைபெற்று வருகிறது.

    ஏற்கனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்களை போலீசார் ஆய்வு செய்தபோது தங்கமணியின் கணக்கு விபரங்களை பள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்த ஆடிட்டர் செந்தில்குமார் (வயது 50) என்பவர் தணிக்கை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து பள்ளிப்பாளையம் பேப்பர் மில் ரோட்டில் உள்ள அவருக்கு சொந்தமான 2 ஆடிட்டர் அலுவலகங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையில் 5 பேர் கொண்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். செந்தில் குமாரிடம் தங்கமணிக்கு தொடர்புடைய நிறுவனங்களில் தணிக்கை செய்த விபரங்கள் மற்றும் மதிப்பீடு, வரவு, செலவு எவ்வளவு விபரம் இருந்தது? என பல்வேறு கேள்விகள் கேட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பல தகவல்களை ஆடிட்டர் செந்தில்குமார் அளித்ததாக தெரிகிறது.

    இதேபோல் பரமத்தி- ஜேடர்பாளையம் ரோடு பொத்தனூர் பகுதியில் உள்ள தொழில் அதிபர் சண்முகம் என்பவருடைய வீட்டில் கரூர் லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தி வருகிறார்கள். இவர் அ.தி.மு.க.வுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளார். மேலும் தங்கமணியின் ஆதரவாளர் ஆவார்.

    தொழில் அதிபர் சண்முகம் தனது வீட்டின் பின்புறம் குடிநீர் திட்டப் பணிகளுக்கான ராட்சத சிமெண்ட் குடிநீர் குழாய் தயாரிக்கும் தொழிற்சாலை வைத்து நடத்தி வருகிறார். இந்த தொழில்சாலையிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும் அவருக்கு சொந்தமாக கோளரம் பகுதியில் கோழிப்பண்ணை உள்ளது. இந்த பண்ணையில் இருந்து தினமும் லோடு கணக்கில் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    ஏற்கனவே சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மகன் தரணிதரன் வீடு, சேலம் ஜங்சனில் உள்ள அஸ்வா பார்க் ஓட்டல் மற்றும் ஓட்டல் உரிமையாளர் குழந்தைவேலு வீடு , மரவனேரியில் உள்ள தங்கமணியின் உறவினர் வீடு உள்பட 4 இடங்களில் கடந்த வாரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள், கணக்கில் வராத நகை மற்றும் பொருட்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

    ஓட்டல் அஸ்வா பார்க் உரிமையாளர் குழந்தைவேலுவின் மகன் மணிகண்டன் வீடு திருவாகவுண்டனூரில் உள்ளது. இந்த வீட்டிற்குள் இன்று காலை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக நுழைந்தனர். பின்னர் கதவுகள் பூட்டப்பட்டு வீட்டில் இருந்தவர்கள் யாரும் வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை. அனைவரது செல்போன்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர்.

    தொடர்ந்து மணிகண்டன் வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையையும் அங்குலம், அங்குலமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருகிறார்கள். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

    இன்று ஒரே நாளில் நாமக்கல்லில் 10 இடங்கள், சேலத்தில் 1 இடம், ஈரோட்டில் 3 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சுமார் 150-க்கும் அதிகமான அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சோதனையின்போது கடந்த 15-ந்தேதி கைப்பற்றப்பட்ட ஆவணங்களை காட்டி தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    ஈரோட்டில் சோதனை நடந்து வரும் வீட்டு முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

    ஈரோட்டில் 3 இடங்களில் தங்கமணியின் உறவினர்கள் வீடுகளில் இன்று காலை முதல் மீண்டும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    வீரப்பன்சத்திரம் சாந்தான்காடு பகுதியில் உள்ள கோபாலகிருஷ்ணன் என்பவரது வீட்டில் இன்று காலை 6 மணி அளவில் திடீரென நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வீட்டிற்குள் இருந்த யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. மேலும் வெளியில் இருந்து ஆட்கள் உள்ளே வரவும் அனுமதிக்கவில்லை. வீட்டின் கதவை பூட்டிக் கொண்டு இந்த சோதனை நடந்து வருகிறது.

    இதேபோல் வில்லரசம்பட்டியில் உள்ள செந்தில்நாதன் என்பவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல் திண்டல் சத்யா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தங்கமணியின் உறவினர் பாலசுந்தரம் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்து வருகிறது.

    ஈரோடு லஞ்ச ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ரேகா தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் 3 குழுவாக பிரிந்து இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மகன் தரணீதரன் 2-வது குற்றவாளியாகவும், மனைவி சாந்தி 3-வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். எப்.ஐ.ஆரில் இவர்களின் பெயர்களிலும் சொத்துக்கள் சேர்க்கப்பட்டு உள்ளது. அதேபோல் தங்கமணி கிரிப்டோ கரன்சியில் பல கோடிகளை முதலீடு செய்ததாகவும் கூறப்பட்டது. அது தொடர்பான விபரங்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கேட்டனர். தொடர்ந்து அதுபற்றி தீவிர விசாரணை நடத்தினர். இன்று நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையிலும் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது. தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதால் அப்பகுதிகளில் அ.தி.மு.க.வினர் மற்றும் தங்கமணியின் ஆதரவாளர்கள் கூடினர்.

    இதனால் அந்த பகுதிகளில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. சோதனை நடந்து வரும் வீடுகள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


    Next Story
    ×