search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அணுமின் நிலைய நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
    X
    அணுமின் நிலைய நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

    உள்ளூர் இளைஞர்கள் புறக்கணிப்பு- கூடங்குளம் அணுமின் நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

    உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு புறக்கணிக்கப்படுவதாக எழுந்த புகாரையடுத்து பஞ்சாயத்து தலைவர் வின்சி மணி அரசு தலைமையில் கூடங்குளம் அணுமின் நிலைய நுழைவு வாயிலில் மறியல் போராட்டம் நடந்தது.
    பணகுடி:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் 2 அணு உலைகள் செயல்பட்டு வருகிறது.

    தற்போது அங்கு 3, 4-வது அணு உலைகள் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் அடுத்த ஆண்டுக்குள் முடிவடைந்து மின் உற்பத்தி தொடங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் 3, 4-வது அணு உலையில் தற்காலிக என்ஜினீயர் பதவிக்கு சமீபத்தில் எழுத்து தேர்வு நடந்தது. இதில் கூடங்குளம் பகுதியை சேர்ந்த ஏராளமான பி.இ. பட்டதாரிகள் கலந்துகொண்டு தேர்வு எழுதினார்கள்.

    இதில் சமீபத்தில் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. கூடங்குளம் பகுதியை சேர்ந்த ஒரு இளைஞர் கூட தேர்ச்சி பெறவில்லை என்று கூறி அவர்களுக்கு ஒட்டுமொத்தமாக வேலை வழங்கப்படவில்லை. வெளியூர், வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் வேலைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

    இது கூடங்குளம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர்கள் அந்த பகுதியில் உள்ள அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்களிட மும் புகார் கூறினார்கள்.

    இதைத்தொடர்ந்து இன்று கூடங்குளம் பஞ்சாயத்து தலைவர் வின்சி மணிஅரசு தலைமையில் கூடங்குளம் அணுமின் நிலைய நுழைவு வாயிலில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் ஜான்சி ரூபா மற்றும் அந்த பகுதியில் உள்ள அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    போராட்டத்திற்கு கூடங்குளம் பொதுமக்களும் ஆதரவு தெரிவித்து பெருமளவில் கலந்து கொண்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    சம்பவ இடத்திற்கு கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. போராட்டம் குறித்து பஞ்சாயத்து தலைவர் வின்சி மணிஅரசு கூறியதாவது:-

    கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம் சார்பாக கூடங்குளம் பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தருவதாக ஆசைவார்த்தை கூறி எங்கள் நிலத்தை அபகரித்தார்கள்.

    தற்போது உள்ளூர் மக்களை புறம்தள்ளி விட்டு கேரளா மற்றும் வெளியூர் இளைஞர்களுக்கு அதிகமாக வேலை கொடுக்கிறார்கள். அணு உலை சார்பாக சிறுவர், சிறுமிகள் விளையாடுவதற்கு கூட ஒரு சிறிய பூங்கா அமைக்கவில்லை. ஆனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அணு உலை பூங்கா எதற்கு? அணு உலைக்காக எங்கள் வாழ்வாதாரத்தை நாங்கள் தாரைவார்த்துள்ளோம். ஆனால் கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம் எங்களுக்கு உதவி செய்ய மறுக்கிறார்கள்.

    எனவே இந்த பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அணு உலைகளை மூடிவிட்டு வெளியேற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    அணுமின் நிலைய நுழைவு வாயில் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்

    தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் கோ‌ஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    கூடங்குளம் மெயின் கேட் வழியாக தினசரி காலை அணு உலை ஒப்பந்த தொழிலாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பணிக்கு செல்வார்கள்.

    இன்று அந்த பகுதியில் உள்ளூர் மக்கள் முற்றுகையிட்டு மறியல் போராட்டம் நடத்தியதால், பணிக்கு செல்பவர்கள் செல்ல முடியாமல் பாதிப்பு ஏற்பட்டது.

    இதனால் 1,000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களும் பணிக்கு செல்ல முடியாமல் அந்த பகுதியில் குவிந்துள்ளனர். இதைத்தொடர்ந்து இன்று கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் நடை பெற்று வரும் 3, 4-வது அணு உலை கட்டுமான பணிகள் பாதிப்பு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    அந்த பகுதியில் அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.


    Next Story
    ×