search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மணிமுத்தாறு அணையில் இருந்து 3 மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்படும் காட்சி.
    X
    மணிமுத்தாறு அணையில் இருந்து 3 மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்படும் காட்சி.

    ஒரே ஆண்டில் 2-வது முறையாக நிரம்பிய மணிமுத்தாறு அணை

    மணிமுத்தாறு அணை இந்த ஆண்டு ஜனவரி மாதமும், டிசம்பர் மாதமும் என ஒரே ஆண்டில் 2 முறை நிரம்பியது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    கல்லிடைக்குறிச்சி:

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை ஆகியவை வழக்கத்தைவிட அதிகளவு தமிழகத்தில் பெய்தது.

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று மாவட்டத்தின் எந்த பகுதிகளிலும் மழை பெய்யவில்லை.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்யாவிட்டாலும் அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளது. பாபநாசம் அணைக்கு இன்று காலை வினாடிக்கு 1,243 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து ஆற்றில் வினாடிக்கு 1,005 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பாபநாசம் அணை நீர்மட்டம் 137.40 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 148.10 அடியாக உள்ளது.

    இதுபோல கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார், கொடுமுடியாறு, வடக்கு பச்சையாறு, நம்பியாறு அணைகளுக்கும் தொடர்ந்து தண்ணீர் வரத்து உள்ளது. இந்த அணைகளும் ஏற்கனவே நிரம்பியதால், அணைகளுக்கு வரும் தண்ணீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.

    நெல்லை, தென்காசி மாவட்டத்தில் உள்ள 11 அணைகளில் மணிமுத்தாறு அணைக்கு மட்டும் தென் மேற்கு பருவமழையின்போது குறைந்த அளவே தண்ணீர் வரும். மற்ற 10 அணைகளுக்கும் தென்மேற்கு பருவமழையின்போதும் கூடுதல் தண்ணீர் வரும்.

    இந்த ஆண்டு பாபநாசம், சேர்வலாறு உள்பட 10 அணைகளும் ஏற்கனவே தென்மேற்கு பருவமழையின்போதும் நிரம்பியது. தற்போது வடகிழக்கு பருவமழையின்போதும் இந்த அணைகள் நிரம்பி உள்ளது. வழக்கமாக இந்த 10 அணைகளும் ஒரே ஆண்டில் 2 முறை நிரம்புவது வழக்கம்.

    ஆனால் மணிமுத்தாறு அணைக்கு தென்மேற்கு பருவமழையின்போது போதிய தண்ணீர் வராததால், வடகிழக்கு பருவமழையின்போது மட்டும் இதுவரை ஆண்டுக்கு ஒருமுறையே நிரம்பும். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை முடிந்து ஜனவரி மாதம் கனமழை பெய்தது. இதனால் மணிமுத்தாறு அணை ஜனவரி மாதம் முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது.

    இந்த நிலையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது அதிக மழை காரணமாக டிசம்பர் மாதமே மணிமுத்தாறு அணை நிரம்பியது. நேற்று மணிமுத்தாறு அணை முழு கொள்ளளவான 118 அடியை எட்டி நிரம்பியதால் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதனால் மணிமுத்தாறு அணை இந்த ஆண்டு ஜனவரி மாதமும், டிசம்பர் மாதமும் என ஒரே ஆண்டில் 2 முறை நிரம்பியது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்று மணிமுத்தாறு அணையில் இருந்து கால்வாய்களில் வினாடிக்கு 400 கனஅடி தண்ணீரும், ஆற்றில் 1000 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது. அணைக்கு வினாடிக்கு 646 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் இன்று காலை 117.20 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து உள்ளதால், அணையில் இருந்து தொடர்ந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    Next Story
    ×