search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மணிமுத்தாறு அணை
    X
    மணிமுத்தாறு அணை

    மணிமுத்தாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு

    தூத்துக்குடியில் சில இடங்களில் மட்டும் தொடர்ந்து வெள்ள நீர் தேங்கி நிற்கிறது. பெரும்பாலான இடங்களில் வெள்ளம் வடிந்து விட்டது.
    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக இந்த ஆண்டு கூடுதல் மழை பெய்துள்ளது.

    கடந்த 2 நாட்களாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மட்டும் மழை பெய்து வருகிறது. நேற்று தென்காசி மாவட்டம் அடவிநயினார் அணைப்பகுதியில் அதிகபட்சமாக 50 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    கருப்பாநதி அணைப் பகுதியில் 16 மில்லிமீட்டரும், சேரன்மகாதேவியில் 13.4 மில்லிமீட்டரும், எட்டயபுரத்தில் 6.1 மில்லிமீட்டரும், கன்னடியன் கால்வாய் பகுதியில் 1.4 மில்லிமீட்டர் மழையும் பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் காற்று வீசியது.

    கடந்த 2 நாட்களாக மழை குறைந்தாலும், அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளது. பாபநாசம் அணைக்கு இன்று காலை விநாடிக்கு 1,390 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து ஆற்றில் விநாடிக்கு 987 கனஅடி திறந்து விடப்படுகிறது. அணை நீர்மட்டம் 137.10 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 147.90 அடியாக உள்ளது.

    மணிமுத்தாறு அணைக்கு இன்று காலை விநாடிக்கு 762 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் 118 அடி உயரம் உள்ள மணிமுத்தாறு அணை நிரம்பி 117.60 அடியாக உள்ளது. இதனால் மணிமுத்தாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. அணையில் இருந்து நேற்று 100 கனஅடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டது. ஆனால் இன்று விநாடிக்கு 305 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    இதனால் மணிமுத்தாறு அணை ஓடையில் கூடுதலாக தண்ணீர் சென்று தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது. தற்போது தாமிரபரணி ஆற்றில் நெல்லை பகுதியில் விநாடிக்கு 8,132 கனஅடி தண்ணீர் செல்கிறது. ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையை கடந்து விநாடிக்கு 10,605 கனஅடி தண்ணீர் கடலுக்கு செல்கிறது.

    தொடர் மழை காரணமாக நெல்லை நகர பகுதிகளிலும் தூத்துக்குடி பகுதியிலும் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி நின்றது. நெல்லையில் அனைத்து வெள்ளநீரும் வடிந்து விட்டது. தூத்துக்குடியில் சில இடங்களில் மட்டும் தொடர்ந்து வெள்ள நீர் தேங்கி நிற்கிறது. பெரும்பாலான இடங்களில் வெள்ளம் வடிந்து விட்டது.

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் தற்போது பிசான சாகுபடி நெல் நடவுபணிகள் வேகமாக நடந்து வருகிறது.
    Next Story
    ×