search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மதுரை வைகை ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்.
    X
    மதுரை வைகை ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்.

    மதுரை வைகை ஆற்றில் 5-வது முறையாக வெள்ள அபாய எச்சரிக்கை: பொதுமக்கள் ஆற்றில் இறங்க தடை

    வைகை ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு மீண்டும் 5-வது முறையாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    மதுரை:

    மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அனைத்து பகுதிகளிலும் உள்ள கண்மாய்கள், குளங்கள் நிரம்பி உள்ளன.

    மேலும் மழைத்தண்ணீர் பல்வேறு இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ளதால் சாலைகள் சேதமடைந்து காணப்படுவதுடன், குடியிருப்பு பகுதிகளிலும் பொது மக்களுக்கு பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டு வருகின்றன. மழைநீர் செல்வதற்கான வாய்க்கால்கள் முறையாக தூர் வாரப்படாததாலும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததாலும் மதுரையில் விரிவாக்க பகுதிகளில் பல இடங்களில் குடியிருப்புகள் மழைநீரால் சூழப்பட்டு பொதுமக்கள் பெரும் தவிப்பில் உள்ளனர்.

    இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு மற்றும் வைகை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மதுரை வைகை அணையில் மொத்த கொள்ளளவான 71 அடியை நெருங்கும் நிலையில் அணையின் நீர்மட்டம் 70.11 அடியாக உள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து கூடுதல் உபரி நீர் முழுவதும் திறக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக வைகை ஆற்றில் 8,600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

    மதுரை வைகை ஆற்றில் கரைபுரண்ட வெள்ளத்தால் தற்போது 5-வது முறையாக மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதிக அளவில் தண்ணீர் வருவதால் பொதுமக்கள் யாரும் ஆற்றுக்குள் இறங்க வேண்டாம் என்றும் கரையோரப் பகுதிகளில் கால்நடைகளை கட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் கரையோரப் பகுதிகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான முறையில் இருக்கவும் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை அறிவிப்பு வழங்கப்பட்டு வருகின்றன.

    மதுரையில் உள்ள கல் பாலம் உள்ளிட்ட தரைப் பாலங்கள் தண்ணீரில் மூழ்கியதால் அந்த வழியாக கடந்த ஒரு வாரமாக போக்கு வரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் யானைக்கல், நெல்பேட்டை, கோரிப்பாளையம், செல்லூர் பகுதிகளில் மேம்பாலங்களில் அனைத்து வாகனங்களும் சென்று வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வைகை ஆற்றின் இணைப்பு சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

    இதனிடையே வைகை ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தைகாண ஏ.வி. மேம்பாலம் மற்றும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மேம்பாலங்களில் ஏராளமான பொதுமக்கள் குழந்தைகளுடன் வந்து வெள்ளத்தை பார்த்து ரசிக்கிறார்கள். சிலர் மேம்பாலத்தில் இருந்து செல்பி எடுத்து மகிழ்கிறார்கள்.

    இதன் காரணமாக பொது மக்களின் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுவதால் மேம்பாலங்களிலும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×