search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வைகை அணை
    X
    வைகை அணை

    தேனி மாவட்டத்தில் கனமழை- வைகை அணையில் இருந்து 8,681 கன அடி நீர் திறப்பு

    தேனி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக வைகை அணையில் நீர் வரத்து அதிகரிக்கவே 8,681 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று பல இடங்களில் இரவு வரை விடாது மழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியான வருசநாடு, வெள்ளிமலை, சுருளியாறு ஆகிய பகுதிகளிலும், போடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும் கனமழை பெய்தது.

    இதனால் அணைக்கு நீர் வரத்து 6294 கன அடியாக உயர்ந்தது. 71 அடி உயரமுள்ள வைகை அணை ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டி விட்டதால் 70.11 அடியில் நிலை நிறுத்தி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அதன்படி நேற்று வரை 6,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் இன்று காலை முதல் 8,681 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 5855 மி.கன அடியாக உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் வைகை அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதாலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முகாமிட்டு அணையை கண்காணித்து வருகின்றனர்.

    அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் வைகை கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி வரும் நிலையில் தற்போது மேலும் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பாக இருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் கடந்த மாதம் 29-ந் தேதி 142 அடியை எட்டியது. அதனைத் தொடர்ந்து கேரள பகுதிக்கு கூடுதல் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர் மட்டம் இன்று காலை 141.95 அடியில் உள்ளது. அணைக்கு நீர் வரத்து 4989 கன அடி. கேரள பகுதிக்கு 5638 கன அடி நீரும், தமிழக பகுதிக்கு 1200 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 7666 மி.கன அடியாக உள்ளது.

    தேனி மாவட்டத்தில் அதிகபட்சமாக வீரபாண்டியில் 13 செ.மீ மழை கொட்டித் தீர்த்தது. இன்றும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    பெரியாறு 28.8, தேக்கடி 21.6, கூடலூர் 61.6, உத்தமபாளையம் 93, வீரபாண்டி 128, வைகை அணை 28.2, சோத்துப்பாறை 14, போடி 98.2, அரண்மனைப்புதூர் 80.2, ஆண்டிபட்டி 64, பெரியகுளம் 2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
    Next Story
    ×