search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி
    X
    எடப்பாடி பழனிசாமி

    வேதா இல்லத்தை மீட்க மேல்முறையீடு- எடப்பாடி பழனிசாமி பேட்டி

    ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை மீட்கும் வகையில், கோர்ட்டு உத்தரவுக்கு எதிராக அ.தி.மு.க. சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்று சேலத்தில் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
    சேலம்:

    சேலத்தில் முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அம்மா உணவகத்தை முடக்க தி.மு.க. அரசு பல்வேறு வகையில் முயற்சி செய்கிறது. இது கண்டிக்கத்தக்கது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்பதற்கு தி.மு.க.விக்கு தகுதி இல்லை. இதுதொடர்பாக கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த காலத்தில் அமைச்சரவை கூட்டப்பட்டது. அதில் நளினிக்கு குழந்தை உள்ளதால் அவரது தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கலாம். மற்றவர்களுக்கு கோர்ட்டு அளித்த தீர்ப்பை நிறைவேற்றலாம் என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

    நான் (எடப்பாடி பழனிசாமி) முதல்-அமைச்சராக இருந்தபோது, அமைச்சரவை கூட்டப்பட்டு 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று கவர்னருக்கு கடிதம் அனுப்பி வைத்தோம். அந்த கோப்பு நிலுவையில் உள்ளது. எனவே இந்த பிரச்சினையில் இப்போது தி.மு.க. அரசு இரட்டை வேடம் போடுகிறது. இப்போது அரசியல் ஆதாயம் தேட மு.க.ஸ்டாலின் நாடகமாடி கொண்டிருக்கிறார். கரூரில் அ.தி.மு.க. மாவட்ட கவுன்சிலர்கள் மீது வழக்கு தொடர்ந்து, அச்சுறுத்தி தி.மு.க.வில் சேர்க்கப்படுகிறார்கள். இதுபோன்று ஆள் சேர்க்கும் நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளார். நேரடியாக அரசியல் களத்தில் சந்திக்க முடியாத, திராணியற்ற கட்சி தி.மு.க.

    பொதுமக்கள் பார்வையிடுவதற்காக ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் அரசுடைமையாக்கப்பட்டது. தற்போது கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பு தொண்டர்களுக்கு வேதனையை அளித்துள்ளது. வருகிற 1-ந்தேதி அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் நடக்கிறது. அதில் வேதா இல்லத்தை மீட்க மேல்முறையீடு செய்ய முடிவு எடுப்போம். எனவே நிச்சயமாக ஜெயலலிதா வாழ்ந்த கோவிலை மீட்டெடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    Next Story
    ×