search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை காணலாம்
    X
    ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை காணலாம்

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை- குற்றாலம் அருவிகளில் 2வது நாளாக வெள்ளப்பெருக்கு

    தொடர்மழையால் குற்றாலம் ஐந்தருவியில் 5 கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் ஒரே அருவியாக காட்சி அளித்தது.
    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பிவிட்டன.

    இந்நிலையில் நேற்று காலை முதல் இன்று காலை வரை மாவட்டம் முழுவதும் மழை பெய்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டி அமைந்துள்ள குற்றாலத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது.

    இதன் காரணமாக மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயினருவியில் ஆர்ச் தெரியாத அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மலையில் இருந்து காட்டாற்று வெள்ளம் வந்ததால் தண்ணீர் செம்மண் நிறத்தில் விழுந்தது.

    இதன் காரணமாக மெயினருவி பகுதியில் நடைபாதையில் போடப்பட்டு இருந்த தளக்கற்கள் பெயர்ந்தன. நடைபாதை கம்பிகளும் அடித்துச்செல்லப்பட்டு சேதமடைந்தன. மேலும் காட்டாற்று வெள்ளத்தால் மலைப்பகுதியில் இருந்து ராட்சத பாறாங்கற்கள் மற்றும் மரத்தடிகள் இழுத்து வரப்பட்டு அருவிக் கரையில் விழுந்தன.

    அருவியை ஒட்டிய பஜாரில் இருந்த ஓட்டல்கள், கடைகளிலும் வெள்ள நீர் புகுந்தது.

    குற்றாலநாதர் கோவிலுக்குள்ளும் வெள்ளம் சென்றதால், அங்கிருந்த அர்ச்சகர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் அதனை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். இதேபோல் மாவட்ட நிர்வாகம் சார்பில் அருவிக்கரையில் கிடந்த பாறாங்கற்கள், மரத்தடிகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டது. தளக்கற்களை சரிசெய்யும் பணியிலும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்றும் காலை வரை மிதமான மழை பெய்தது. ஆனால் மழை சற்று தணிந்ததாலும் இன்றும் 2-வது நாளாக வெள்ளம் சீற்றத்துடனே காணப்படுகிறது.

    தொடர்மழையால் குற்றாலம் ஐந்தருவியில் 5 கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் ஒரே அருவியாக காட்சி அளித்தது. பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் பாதை வரை வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
    Next Story
    ×