search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் சேகர்பாபு
    X
    அமைச்சர் சேகர்பாபு

    தமிழகத்தில் 451 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்த திருப்பணிகள் - அமைச்சர் சேகர்பாபு

    தமிழகத்தில் 451 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சென்னை வடபழனி முருகன் கோவில், புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோவில், திண்டுக்கல் மாவட்டம் தண்டாயுதபாணி சுவாமி கோவில், மதுரை மாவட்டம் கூடழலகர் கோவில், காஞ்சீபுரம் குன்னவாக்கம் வேணுகோபாலசுவாமி கோவில், வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை காளகஸ்தீஸ்வரர் கோவில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம் காசி விஸ்வநாதர் கோவில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் கோவில், சேலம் மாவட்டம் மேட்டூர் சென்றாயப் பெருமாள் கோவில், கோவை மாவட்டம் கோட்டை கங்கமேஸ்வரர் கோவில், மயிலாடுதுறை, சீர்காழி வீர நரசிம்மப்பெருமாள் கோவில், நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ரத்தின கீரீஸ்வரசுவாமி கோவில், தஞ்சாவூர் மாவட்டம் கோபுராபுரம் சொர்ணபுரீஸ்வரர் கோவில், திருச்சி மாவட்டம் லால்குடி லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில் உள்பட 451 கோவில்களுக்கு ஆகம விதிகள்படி திருப்பணிகள் மேற்கொள்ள வல்லுநர் குழுவால் பரிந்துரைக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இந்த பணிகள் முடிவுற்றதும் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) நடத்தப்படும். முக்கியமாக பழனி தண்டாயுதபாணி கோவிலில் ரூ.250 கோடி மதிப்பீட்டிலும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.300 கோடி மதிப்பீட்டிலும், பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில் ரூ.125 கோடி மதிப்பீட்டிலும் திருப்பணி செய்யப்படவுள்ளன. இப்பணிகள் முடிவுற்றதும் குடமுழுக்கு நடத்தப்படும்.

    திருத்தணி, திருச்செங்கோடு, திருநீர்மலை, திருச்சி மலைக்கோட்டை, திருக்கழுக்குன்றம் ஆகிய 5 மலைக்கோவில்களிலும், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் புதிய ரோப்கார் அமைக்க வரைபடம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முடிந்தவுடன் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் தொடங்கப்படும்.

    கோவில் திருப்பணி, குளம், நந்தவனம், தேர் போன்ற பணிகளுக்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்ஜெட்டில் அறிவித்தார். அதன்படி இந்த ஆண்டு 40 சிறிய கோவில்களின் குளங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றன.

    சிலை கடத்தல் தடுப்பு பிரிவை முதல்-அமைச்சரின் கட்டுப்பாட்டில் பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. உள்துறை வாயிலாக வெளிநாட்டில் உள்ள சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிலைகள் கடத்தப்படுவதை தடுக்க 3 ஆயிரத்து 87 கோவில்களில் பாதுகாப்பு அறை அமைக்க ரூ.308.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது வடபழனி முருகன் கோவிலில் ஒரு பாதுகாப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும் பாதுகாப்பு அறை அமைக்கப்படும்.

    தமிழகத்தில் நிதி வசதி இல்லாத கோவில்களில் ஒருகால பூஜை நடத்துவதற்கு ரூ.129 கோடி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார். இதனால் சிறு கோவில்களில் தினந்தோறும் விளக்கு எரிகின்ற சூழ்நிலை உருவாகும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் டாக்டர் பி.சந்திரமோகன், இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் கமிஷனர்கள் இரா.கண்ணன், ந.திருமகள், சி.ஹரிப்ரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×