search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜே.பி.நட்டா திறந்து வைத்த பா.ஜ.க. புதிய அலுவலக கட்டிடம்.
    X
    ஜே.பி.நட்டா திறந்து வைத்த பா.ஜ.க. புதிய அலுவலக கட்டிடம்.

    4 மாவட்ட பா.ஜ.க., புதிய அலுவலக கட்டிடங்கள்-திருப்பூர் விழாவில் ஜே.பி.நட்டா திறந்து வைத்தார்

    விழாவில் பங்கேற்ப தற்காக திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி கோவை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திருப்பூரில் குவிந்தனர்.
    திருப்பூர்:

    நாடு முழுவதும் பா.ஜனதா கட்சிக்கு சொந்த அலுவலக கட்டிடம் இல்லாத மாவட்டங்களில் சொந்த கட்டிடம் கட்டும் திட்டத்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜனதா தொடங்கியது. அந்த வகையில் தமிழகத்தில் முதல் கட்டமாக 17 மாவட்டங்களில் சொந்த கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.

    நாடு முழுவதும் அனைத்து மாவட்ட அலுவலகங்களும் ஒரே மாதிரியாக இருக்கும் வகையில் கட்டிட வரைபடத்தை டெல்லி தலைமை வடிவமைத்து கொடுத்துள்ளது. அதன்படி கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. தலைவர் அறை, வரவேற்பறை, கூட்ட அரங்கு, நிர்வாகிகள் அறை, முக்கிய பிரமுகர்கள் ஓய்வு அறை, விசாலமான பார்க்கிங் வசதி  உள்ளிட்ட வசதிகள் கொண்டதாகவும் கட்டப்படுகிறது.

    தமிழகத்தில் திருப்பூர்,  ஈரோடு, நெல்லை, திருப்பத்தூரில் கட்டிட பணிகள் முடிவடைந்ததையடுத்து அந்த அலுவலக கட்டிடங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டது. இதற்கான விழா திருப்பூரில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது. இதில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டு புதிய அலுவலக கட்டிடங்களை திறந்து வைத்தார்.

    இதற்காக அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் 12-15 மணிக்கு கோவை வந்தார். அங்கிருந்து கார் மூலம் திருப்பூர் வந்தார். 12-45 மணியளவில் பல்லடம் வந்த அவருக்கு பா.ஜ.க. சார்பில்  சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அதன்பிறகு மதியம் 2-30 மணிக்கு திருப்பூர் வீரபாண்டி பல்லடம் மெயின்ரோட்டில் உள்ள லட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற்று வந்த பா.ஜ.க.மாநில செயற்குழு கூட்டத்தில் ஜே.பி. நட்டா கலந்து கொண்டார்.

    இதில் தமிழகத்தில் பா.ஜ.க.வை பலப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்டவை தொடர்பாக பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு ஜே.பி. நட்டா ஆலோசனைகள்  வழங்கினார்.

    இதையடுத்து மாலை 4 மணிக்கு திருப்பூர் பல்லடம் மெயின்ரோடு வித்தியாலயம், செல்வலட்சுமி நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைமை அலுவலகத்தை ஜே.பி.நட்டா திறந்து வைத்தார். அங்கிருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் நெல்லை, திருப்பத்தூர், ஈரோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட அலுவலகங்களையும் திறந்து வைத்தார்.
      
    பின்னர் புதிய மாவட்ட அலுவலகம் பின்புறம்  உள்ள மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஜே.பி.நட்டா பங்கேற்று பேசினார். 

    இந்நிகழ்ச்சிகளில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தேசிய செயற்குழு உறுப்பினர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., கேரள மாநில பொறுப்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள்,  மாவட்ட தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    ஜே.பி.நட்டா வருகையையொட்டி திருப்பூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு  ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. மாநகர போலீஸ் துணைகமிஷனர்கள் அரவிந்த், ரவி ஆகியோர் தலைமையில் 6 உதவி கமிஷனர்கள், 8 இன்ஸ்பெக்டர்கள்  உள்பட 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதுதவிர உளவு பிரிவு, நுண்ணறிவு பிரிவு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜே.பி. நட்டா வாகனத்தில் செல்லும் வழித்தடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் விழா நடைபெறும்  மேடையை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

    விழாவில் பங்கேற்ப தற்காக இன்று பகல் 11மணியில் இருந்து திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி கோவை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திருப்பூரில் குவிந்தனர்.  ஜே.பி.நட்டாவை  வரவேற்று திருப்பூர் மாநகரின் பல்வேறு இடங்களில் பா.ஜ.க.கட்சி கொடிகள் கட்டப்பட்டு இருந்தன. 

    பல இடங்களில் வரவேற்பு வளைவுகள், பிரம்மாண்ட டிஜிட்டல் பேனர்களும் அமைக்கப்பட்டு இருந்தன. இதனால் திருப்பூர் விழாக்கோலமாக காட்சியளித்தது.

    தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்தும் வகையில் தேசிய தலைமை தீவிரம் காட்டி வருகிறது. அதற்கேற்ப பா.ஜ.க.நிர்வாகிகள், தொண்டர்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் இன்று ஜே.பி. நட்டா வருகை நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×