search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காய்கறிகள்
    X
    காய்கறிகள்

    தக்காளியை தொடர்ந்து முருங்கைக்காய், வெண்டைக்காய், அவரை, பீன்ஸ் விலையும் சதம் அடித்தது

    பீன்ஸ், கத்தரிக்காய், வெண்டைக்காய், பாகற்காய் உள்ளிட்ட காய்கறிகள் வரத்து வெகுவாக குறைந்து விட்டதால் விலை அதிகரித்து வருகிறது.
    போரூர்:

    சென்னை கோயம்பேடு மார்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து தினசரி 450 லாரிகள் வரை காய்கறிகள் விற்பனைக்கு வருவது வழக்கம்.

    இதில் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து தான் 75 சதவீதம் காய்கறிகள் கோயம்பேடு சந்தைக்கு விற்பனைக்கு வருகிறது.

    ஆனால் அந்த பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பயிரிடப்பட்டிருந்த தக்காளி உள்ளிட்ட காய்கறி செடிகள், தோட்டங்கள் பெரும்பாலும் மழை வெள்ளத்தால்அடித்து செல்லப்பட்டு சேதம் அடைந்து உள்ளது.

    உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. தினசரி 70 லாரிகள் வரை வந்து கொண்டிருந்த தக்காளி தற்போது 40 லாரிகளாக குறைந்ததால் விலை அதிகரிக்க தொடங்கியது.

    இன்றும் 200 லாரிகளில் மட்டுமே காய்கறிகள் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் காரணமாக அங்கிருந்து வரும் தக்காளி, பீன்ஸ், கத்தரிக்காய், வெண்டைக்காய், பாகற்காய் உள்ளிட்ட காய்கறிகள் வரத்து வெகுவாக குறைந்து விட்டதால் விலை அதிகரித்து வருகிறது.

    கடந்த 2 நாட்களாகவே கோயம்பேட்டில் உள்ள சில்லரை கடைகளில் தக்காளி ஒரு கிலோ ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெளிமார்க்கெட் மற்றும் காய்கறி சில்லரை விற்பனை கடைகளில் தக்காளி விலை ஒரு கிலோ ரூ. 150-ஐ கடந்து விற்கிறது.

    இதற்கிடையே தக்காளியை தொடர்ந்து பச்சை காய்கறிகளான பீன்ஸ், அவரைக்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய், பன்னீர் பாகற்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் கிலோ ரூ. 100-ஐ கடந்து செல்ல தொடங்கி விட்டது.

    இதனால் தினசரி காய்கறி வாங்க கடைக்கு செல்லும் இல்லத்தரசிகள் பலர் காய்கறிகளின் விலையை கேட்டு கவலை அடைந்து வருகின்றனர். மேலும் தேவையான காய்கறிகளை கடைகளில் குறைந்த அளவில் வாங்கி திரும்பி செல்கிறார்கள்.

    இன்று கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி சில்லரை விற்பனை விலை விபரம் வருமாறு (கிலோவில்) :-

    தக்காளி- ரூ. 120, பீன்ஸ்- ரூ100, அவரைக்காய்- ரூ. 110, வெண்டைக்காய்-ரூ. 100, உஜாலா கத்தரிக்காய்- ரூ. 90, முருங்கைக்காய்-ரூ. 150, முட்டை கோஸ்-ரூ. 50, ஊட்டி கேரட்-ரூ. 70.
    Next Story
    ×