search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.கே.வாசன்
    X
    ஜி.கே.வாசன்

    ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும்- ஜி.கே.வாசன்

    மத்திய அரசு, ஆன்லைன் மூலம் விளையாட்டுகளை கொண்டுவந்து பணம் பறிக்கும், அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கையை வீணாக்கும் தொழிலை முற்றிலுமாக முடக்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசு, ஆன்லைன் விளையாட்டுகளை கண்காணித்து பொதுமக்களை பாதிக்காமல் இருக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஆன்லைன் விளையாட்டுகளில் அதிக ஆர்வம் கொண்டு விளையாடுவதால் அவர்களின் பணம், மனம், வாழ்க்கை சீரழிகிறது. ஆன்லைன் விளையாட்டு விளையாடி பலர் உயிரிழந்தது மிகவும் வேதனைக்குரியது. இனியும் இது தொடரக்கூடாது.

    இந்தநிலையில் ஆன்லைன் விளையாட்டு சம்பந்தமாக எழுந்த புகாரின் அடிப்படையில் பப்ஜி ஆன்லைன் விளையாட்டு விளையாட தடை செய்யப்பட்டது. ஆனால் தடை செய்யப்பட்ட விளையாட்டுக்கு பதிலாக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய பெயரில் வெவ்வேறு விளையாட்டுகள் ஆன்லைனில் வந்துள்ளது.

    இதிலும் சிறியவர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் ஆகியோர் ஆர்வத்துடன் ஈடுபட்டு விளையாடி நேரத்தையும், பணத்தையும், வாழ்க்கையையும் தொலைத்து விடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஆபத்தை ஏற்படுத்தும் புளூவேல் ஆன்லைன் விளையாட்டு போன்ற பாதிப்பை ஏற்படுத்தும் ஆன்லைன் விளையாட்டுகள் அனைத்தையும் நம் நாட்டில் தடை செய்ய வேண்டும்.

    பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடாமல் இருக்கவும் கணினி, மொபைல் ஆகியவற்றை பயனுள்ள வகையில் தேவைக்கு மட்டுமே வீட்டு நலன், நாட்டு நலன் கருதி பயன்படுத்தவும் அன்புக்கட்டளை இட வேண்டும்.

    மத்திய அரசு, ஆன்லைன் மூலம் விளையாட்டுகளை கொண்டுவந்து பணம் பறிக்கும், அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கையை வீணாக்கும் தொழிலை முற்றிலுமாக முடக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×