search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழைநீர்
    X
    வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழைநீர்

    வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதி

    வீடுகளை சுற்றி தேங்கியுள்ள மழை நீரை அகற்ற அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்த பகுதியில் மழைநீர் கால்வாய் அமைத்து தரவேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    பூந்தமல்லி:

    பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட எல்.கே.பி. நகர், தனலட்சுமி நகர் ஆகிய பகுதியில் கடந்த வாரம் பெய்த கனமழையால் வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. சில வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்து விட்டது. மழைநின்று ஒரு வாரமாகியும் இன்னும் பல இடங்களில் தண்ணீர் வடியவில்லை. வீடுகளை சுற்றிலும், சில வீடுகளுக்குள்ளும் மழைநீர் தேங்கியே நிற்கிறது.

    வீடுகளை சுற்றி முழங்கால் அளவு தேங்கியுள்ள மழைநீரில்தான் இந்த பகுதி பொதுமக்கள் சென்று வருகின்றனர். மழைநீருடன் கழிவுநீரும் கலந்து நிற்பதால் துர்நாற்றம் வீசுவதுடன், இரவில் கொசுத்தொல்லையும் அதிகரித்து உள்ளதால் வீடுகளில் தூங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    பூந்தமல்லி நகராட்சி அதிகாரிகள் ஒரு நாள் மட்டும் மோட்டார் வைத்து மழைநீரை அகற்றியதாகவும், ஆனால் அந்த மோட்டார் பழுதடைந்ததால் மழை நீரை அகற்றும் பணி பாதியில் நின்று போனதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

    வீட்டுக்குள் தேங்கி நிற்கும் மழைநீரில் கட்டில் போட்டு வசித்து வருகின்றனர். வீட்டில் மின்சாரமும் இருப்பதால் மழைநீரில் நின்றபடி மின்சார சுவிட்ச்சை தொட வேண்டியது இருப்பதாகவும், மழைநீரில் மின்கசிவு ஏற்பட்டு விடுமோ? என எந்நேரமும் அச்சத்துடன் வசித்து வருவதாகவும் வீட்டில் உள்ளவர்கள் கவலை தெரிவித்தனர்.

    வீடுகளை சுற்றி தேங்கியுள்ள மழை நீரை அகற்ற அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்த பகுதியில் மழைநீர் கால்வாய் அமைத்து தரவேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    Next Story
    ×