search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.கே.வாசன்
    X
    ஜி.கே.வாசன்

    மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு- முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை பலப்படுத்த வேண்டும்: ஜி.கே.வாசன்

    தொடர்ந்து மழை பெய்ய ஆரம்பிக்கும் முன்பாகவே உள்ளாட்சி நிர்வாகமும், சுகாதாரத்துறையும், பொதுப்பணித்துறையும் முன்னேற்பாட்டோடு செயல்பட வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் நாளை (17-ந்தேதி) மற்றும் நாளை மறுநாள் (18-ந்தேதி) தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும். குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் இன்னும் இரண்டு, மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது.

    ஏற்கனவே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த பருவமழை, கனமழை ஆகியவற்றால் சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டு தண்ணீர் தேங்கியதால் சுகாதாரப் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

    மொத்தத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இவற்றையெல்லாம் சரி செய்ய நடவடிக்கை எடுத்து வந்தாலும் அதற்குள் மீண்டும் மழை பெய்யும் என்ற அறிவிப்பு வெளிவந்திருப்பதை தமிழக அரசு முக்கிய கவனத்தில் கொள்ள வேண்டும்.

    அதாவது சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டப் பகுதிகளில் தேங்கி இருக்கும் தண்ணீரை முழுமையாக அகற்ற வேண்டும், சாலைப் போக்குவரத்தில் உள்ள பிரச்சனைகளையும், குடிநீர் வழங்குவதில், கழிவுநீர் செல்வதில், மின் கம்பம், மரங்கள் சாய்ந்திருப்பதை சரி செய்வதில் உடனடி தீர்வு காண வேண்டும்.

    இப்படி மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்தால் தான் தொடர்ந்து பெய்ய இருக்கும் மழையில் இருந்து விவசாயிகளை, ஏழை, எளிய, சாதாரண, நடுத்தர மக்களை ஓரளவுக்காவது பாதிப்பில் இருந்து பாதுகாக்க முடியும்.

    எனவே தொடர்ந்து மழை பெய்ய ஆரம்பிக்கும் முன்பாகவே உள்ளாட்சி நிர்வாகமும், சுகாதாரத்துறையும், பொதுப்பணித்துறையும் முன்னேற்பாட்டோடு செயல்பட வேண்டும்.

    குறிப்பாக தமிழக அரசு நெல் மூட்டைகளைப் பாதுகாத்தல் உள்ளிட்ட விவசாயப் பயிர்கள், நீர்த்தேக்கங்களில் இருந்து உபரிநீர் வெளியேற்றம், கரையோர மக்களின் பாதுகாப்பு, நிவாரண உதவிகள் வழங்குதல் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

    எனவே அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பலப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.
    Next Story
    ×