search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    138 அடியை எட்டி கடல் போல் காட்சியளிக்கும் பாபநாசம் அணை
    X
    138 அடியை எட்டி கடல் போல் காட்சியளிக்கும் பாபநாசம் அணை

    பாபநாசம் அணையில் கடந்த ஆண்டைவிட 38 சதவீதம் நீர் இருப்பு அதிகரிப்பு

    மணிமுத்தாறு அணையில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 11 சதவீதம் நீர் இருப்பு அதிகரித்துள்ளது.
    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வந்த நிலையில் நேற்று பெரும்பாலான இடங்களில் மழை குறைந்தது. ஒருசில இடங்களில் மட்டும் பலத்த மழை பெய்தது.

    நெல்லை மாவட்டத்தில் 2 நாட்களுக்கு முன்பு வரை பெய்த கனமழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது. பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 137.80 அடியாக உள்ளது. சேர்வலாறு அணையில் 148.06 அடி நீர் இருப்பு உள்ளது.

    பாபநாசம் அணை பகுதியில் இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக 21 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. தொடர்ந்து அந்த பகுதியில் மழை பெய்வதால் அணைக்கு 7377.71 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து உபரியாக வினாடிக்கு 7,771 கனஅடி நீர் தாமிரபரணி ஆற்றில் இருந்து திறந்துவிடப்படுகிறது.

    இதன் காரணமாக ஆற்றில் அதிகளவு நீர் கரைபுரண்டு ஓடுவதால் ஆற்றில் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பேரிடர் மீட்பு குழுவினரும் ஆங்காங்கே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பாபநாசம் படித்துறை பகுதியில் வெள்ளம் அதிகரித்து உள்ளதால் அங்கும் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பாபநாசம் கோவில் மற்றும் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில்களுக்கும் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

    பாபநாசம் படித்துறையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதை காணலாம்

    118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 89.30 அடி நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அனைத்து அணைகளிலும் நீர் இருப்பு அதிகரித்து உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில்
    பாபநாசம் அணை
    56.14 சதவீதம் நீர் இருப்பு இருந்தது. ஆனால் இந்த ஆண்டு 94.15 சதவீதமாக உள்ளது. இதனால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 38 சதவீதம் நீர் இருப்பு அதிகரித்துள்ளது.

    இதேபோல் கடந்த ஆண்டு 35.15 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு இருந்த சேர்வலாறு அணையில் இந்த ஆண்டு 86.68 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. மணிமுத்தாறு அணையில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 11 சதவீதம் நீர் இருப்பு அதிகரித்துள்ளது.

    மாவட்டத்தில் கொடு முடியாறு அணை தனது முழு கொள்ளளவான 52.50 அடியை எட்டி விட்டதால் அணைக்கு வரும் 700 கனஅடி நீரும் உபரியாக திறந்து விடப்படுகிறது. நம்பியாறு அணையும் தொடர்ந்து நிரம்பி வழிகிறது.

    தொடர் மழை காரணமாக மாவட்டம் மற்றும் மாநகர பகுதியில் சாலைகள் சேதமடைந்துள்ளன. பெரும்பாலான இடங்களில் குண்டும், குழியுமாக சாலைகள் காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

    மாநகர பகுதியில் சேதமான சாலைகள் குறித்த பொதுமக்களின் புகார் காரணமாக தொண்டர் சன்னதி, நயினார்குளம் சாலை உள்ளிட்ட சாலைகளில் தற்காலிகமாக சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி நாங்குநேரி, மணிமுத்தாறு ஆகிய இடங்களில் தலா 5 மில்லி மீட்டரும், அம்பையில் 3 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை, ஆய்க்குடி, ராமநதி, கடனாநதி, கருப்பாநதி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. அடவிநயினார் அணை பகுதியில் நேற்று காலை முதல் இரவு வரை மழை நீடித்தது. அதிகபட்சமாக 10 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    இதனால் அணை தனது முழு கொள்ளளவான 152 அடியை எட்டி இந்த ஆண்டில் 3-வது முறையாக நிரம்பி வழிகிறது. எனவே விவசாயிகள் மகிழ்ச்சியுடன் பிசான பருவ சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணையில் 83 அடியும், 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணையில் 82 அடியும் நீர் இருப்பு உள்ளது. குண்டாறு மற்றும் அடவிநயினார் அணைகள் நிரம்பி வழிகின்றன.

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகளில் கடந்த 2 நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை முதல் மழை குறையத்தொடங்கியதால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு தணிந்தது.

    மெயினருவி, ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலம் அருவிகளில் மிதமான அளவில் தண்ணீர் கொட்டியது.


    Next Story
    ×