search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.கே.வாசன்
    X
    ஜி.கே.வாசன்

    விவசாயிகளின் துயர் துடைக்க இழப்பீடு வழங்க வேண்டும்- ஜி.கே.வாசன்

    அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்ட பருத்தி, மக்காச்சோளம் பூ உதிர்ந்ததால் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
    சென்னை:

    த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் மழை நீரில் முழ்கி பாழாகும் நிலையில் இருக்கிறது.

    மயிலாடுதுறையில் 20 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டதில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி வீணாகிவிட்டது. நாகப்பட்டினத்தில் பின்பட்ட குருவை நடவு செய்து அறுவடைக்கு உள்ள சுமார் 500 ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளது.

    திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி பகுதியில் பருத்தி, மக்காச்சோளம் மழையில் நனைந்து அதன் பூ உதிர்ந்து வீணாகிவிட்டது.

    திருவாரூர் மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் தொடர் மழையால் முழுமையாக சேதமடையும் நிலையில் உள்ளது.

    அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்ட பருத்தி, மக்காச்சோளம் பூ உதிர்ந்ததால் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் பயிர் நிலங்கள் மழை நீரினால் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கரில் செய்யப்பட்ட நடவு மற்றும் விதைப்பு பாதிப்படைந்துவிட்டது.

    ஒவ்வொரு ஏக்கருக்கும் குறைந்த பட்சம் 25 ஆயிரம் ரூபாய் செலவு செய்து பயிர் செய்ததாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இன்னும் 2, 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடிகால் பிரச்சனை இருக்கிறது. மழை நீரும் தேங்கி இருக்கிறது. பயிர்கள் சேதமாகிவிட்டன. விவசாயிகளுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக லட்சக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட சம்பா, தாளடி நெற்பயிர்கள் கனமழையினால் தண்ணீரில் மூழ்கி அழுகிவிட்டதால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். இந்நிலையில் விவசாயிகளின் துயர் துடைக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.

    எனவே தமிழக அரசு, டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் கனமழையால் சேதமடைந்து, அழுகி, வீணாகிவிட்டதை கவனத்தில் கொண்டு உடனடியாக அவற்றை கணக்கெடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டை வழங்க தயாராக இருக்க வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×