search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முல்லைப்பெரியாறு அணை
    X
    முல்லைப்பெரியாறு அணை

    பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடி தேக்கப்படுமா?- விவசாயிகள் எதிர்பார்ப்பு

    முல்லைப்பெரியாறு அணையில் இருந்து இன்று காலை முதல் கேரளாவுக்கு திறக்கும் உபரிநீர் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் 142 அடி வரை தேக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை தேக்கிக்கொள்ள தமிழகத்திற்கு உரிமை இருந்தும் கடந்த மாதம் 29-ந் தேதி அணைப்பகுதிக்கு சென்ற கேரள மந்திரிகள் 2 ‌ஷட்டர்கள் மூலம் தண்ணீரை வீணாக திறந்து விட்டனர்.

    அதன்பிறகு படிப்படியாக நீரின் அளவு அதிகரிக்கப்பட்டு நேற்று வரை 3813 கன அடி வரை தண்ணீர் வெளியேற்றப்பட்டது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த விடாமல் வீணாக தண்ணீரை வெளியேற்றும் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்து விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் அ.தி.மு.க., பா.ஜ.க. போன்ற எதிர்கட்சிகளும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று அணைப்பகுதியை பார்வையிட்ட தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான குழுவினர் நீர்மட்டத்தை 152 அடி வரை நிலை நிறுத்துவதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக தெரிவித்தனர்.

    இந்நிலையில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரின் அளவு இன்று காலை முதல் 2450 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 138.50 அடியாக உள்ளது. வரத்து 4010 கன அடி. தமிழக பகுதிக்கு 2305 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 6748 மி.கன அடியாக உள்ளது.

    இதனால் அணையின் நீர்மட்டம் 142 அடி வரை தேக்கி அதன்பிறகு உபரி நீரை வெளியேற்றிக்கொள்ளலாம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    வைகை அணை

    வைகை அணை நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 65.81 அடியாக உள்ளது. அணைக்கு 4168 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 969 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4810 மி.கன அடியாக உள்ளது.

    தொடர்ந்து நீர்மட்டம் உயர்ந்து வருவதால் இந்த ஆண்டு 3-வது முறையாக முழு கொள்ளளவை எட்டும் நிலையை அடைந்துள்ளது. இதனால் கரையோரம் உள்ள மக்களுக்கு இன்றோ அல்லது நாளையோ வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். அணைக்கு வரும் நீரின் அளவை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    ஏற்கனவே மஞ்சளாறு, சோத்துப்பாறை ஆகிய அணைகள் நிரம்பிவிட்டதால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பெரியாறு 6.6, தேக்கடி 13.8, கூடலூர் 3.7, சண்முகாநதி அணை 3.5, உத்தமபாளையம் 4.4, வீரபாண்டி 3.5, வைகை அணை 7.8, மஞ்சளாறு 15, சோத்துப்பாறை 30, ஆண்டிபட்டி 6.6, பெரியகுளம் 45, போடி 55 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.



    Next Story
    ×