search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை ரெயில் நிலையம்
    X
    மதுரை ரெயில் நிலையம்

    தென் மாவட்டங்களுக்கு தீபாவளி சீசன் சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்படுமா?- பயணிகள் எதிர்பார்ப்பு

    தனியார் ஆம்னி பஸ்களில் கட்டணம் அதிகம் என்பதால் ரெயிலில் பயணிப்பதையே மக்கள் பெரிதும் விரும்புகின்றனர்.
    மதுரை:

    தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் (நவம்பர்) 4-ந் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்களை இயக்க போவதாக அறிவித்து உள்ளது. இதற்கான முன்பதிவும் தொடங்கி நடந்து வருகிறது.

    ஆனால் தீபாவளிக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் தென்னக ரெயில்வே இதுவரை தீபாவளி சீசன் சிறப்பு ரெயில்களை அறிவிக்காதது பொதுமக்களிடம் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் நெல்லை எக்ஸ்பிரஸ் (திருநெல்வேலி-சென்னை), பொதிகை, (சென்னை-செங்கோட்டை), முத்துநகர் எக்ஸ்பிரஸ் (சென்னை-தூத்துக்குடி), கொல்லம் எக்ஸ்பிரஸ் (சென்னை-கொல்லம்) உள்பட 10-க்கும் மேற்பட்ட தினசரி ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இதுதவிர சில வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில்களும் இயக்கப்படுகின்றன. இந்த ரெயில்களுக்கான தீபாவளி முன்பதிவு டிக்கெட்டுகள் அனைத்தும் தீர்ந்து விட்டன.

    இந்த நிலையில் தாம்பரம்-நாகர்கோவில் இடையே அறிவிக்கப்பட்ட தீபாவளி சீசன் சிறப்பு ரெயிலிலும் முன்பதிவு டிக்கெட்டுகள் அனைத்தும் தீர்ந்து விட்டன.

    இந்த ரெயில் தாம்பரத்தில் இருந்து நவம்பர் 3-ந் தேதி இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.30 மணிக்கு நாகர்கோவில் செல்லும்.

    அதேபோல மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து நவம்பா 7-ந்தேதி மாலை 4.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் செல்லும்.

    எனவே தென்னக ரெயில்வே உடனடியாக தீபாவளி சீசன் சிறப்பு ரெயில் இயக்குவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்.

    பண்டிகை காலத்தில், பஸ்களில் இடம் கிடைக்காது. தனியார் ஆம்னி பஸ்களில், கட்டணம் தாறுமாறாக இருக்கும். இதனால் ரெயிலில் பயணிப்பதையே மக்கள் பெரிதும் விரும்புகின்றனர்.

    கோவை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை ஆகிய பகுதிகளில் மதுரை மற்றும் தென் மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கானோர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் தீபாவளி பண்டிகைக்காக, சொந்த ஊருக்கு செல்ல வழி தெரியாமல் திண்டாடி வருகின்றனர். ஏனென்றால் கோவை, பொள்ளாச்சி வழியாக மதுரைக்கு ரெயில் போக்குவரத்து இல்லை.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் இருந்து பொள்ளாச்சி வழித்தடத்தில் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும். இதன் மூலம் ரெயில்வே துறைக்கு கணிசமான வருவாய் கிடைக்கும். பொதுமக்களும் குறைந்த செலவில், குறைந்த நேரத்தில் பாதுகாப்பாக பயணிக்க முடியும்.

    சென்னையில் இருந்து கன்னியாகுமரி தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டால் இதன் மூலம் வெளியூரில் வசிக்கும் பொதுமக்கள் தீபாவளிக்காக சொந்த ஊருக்கு நிம்மதியாக சென்று திரும்ப முடியும்.

    எனவே தென்னக ரெயில்வே இந்த வி‌ஷயத்தில் உடனடியாக தலையிட்டு சிறப்பு ரெயில்களை விரைவாக அறிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    Next Story
    ×