search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள விடுதியில் உள்ள விஜயபாஸ்கர் அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ளது
    X
    ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள விடுதியில் உள்ள விஜயபாஸ்கர் அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ளது

    ஆயிரம்விளக்கு அலுவலகத்துக்கு ‘சீல்’- விஜயபாஸ்கர் உதவியாளரின் நண்பரிடம் விசாரணை நடத்த முடிவு

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளரின் நண்பரிடம் விசாரணை நடத்தபோலீசார் திட்டமிட்டு உள்ளனர்.
    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அவரது உறவினர்கள், உதவியாளர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று நடத்திய சோதனை நள்ளிரவு வரை நீடித்தது.

    சென்னை உள்பட 50 இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. போலீசாரின் சோதனை பட்டியலில் ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் மேன்சன் ஒன்றில் செயல்பட்டு வரும் ரியல் எஸ்டேட் அலுவலகமும் இடம்பெற்று இருந்தது.

    விஜயபாஸ்கரின் உதவியாளருக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் இந்த அலுவலகத்தை நடத்தி வந்தார். இங்கு சோதனை நடத்துவதற்காக மாலை 3 மணியளவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்றனர்.

    ஆனால் அந்த அலுவலகம் பூட்டி கிடந்தது. இதையடுத்து அங்கு லஞ்ச ஒழிப்பு போலீசாரால் சோதனை நடத்த முடியவில்லை. இதன் காரணமாக அலுவலகத்துக்கு சீல் வைக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர்.

    இது தொடர்பாக வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எழும்பூர் வருவாய் ஆய்வாளர் தீபா மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று அலுவலகத்துக்கு சீல் வைத்தனர்.

    இந்த அலுவலகத்தை வேறொரு நாளில் திறந்து சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக அலுவலகத்தை நடத்தி வரும் சந்திரசேகர் என்பவரிடம் விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

    இதற்காக விரைவில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட இருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    Next Story
    ×