search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை மாநகராட்சி
    X
    சென்னை மாநகராட்சி

    பூங்காக்களை முறையாக பராமரிக்காவிட்டால் ஒப்பந்தம் ரத்து- மாநகராட்சி எச்சரிக்கை

    பூங்காத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் பராமரிப்பு பணிகளை சரிவர மேற்கொள்ளாத ஒப்பந்த நிறுவனங்களுக்கு 31.07.2021 முதல் 16.10.2021 வரை ரூ.4,96,317 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை மாநகராட்சி, பூங்காத்துறையின் சார்பில் மாநகரில் சுற்றுச்சூழலை பேணிகாக்கவும், பொதுமக்களின் பொழுது போக்கிற்காகவும், 704 பூங்காக்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இவற்றில் 540 பூங்காக்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

    தனியாரிடம் பராமரிப்பிலுள்ள பூங்காக்களில் ஒப்பந்ததாரர்கள் புல்வெளிகளை வெட்டி பராமரித்தல், தேவையான நேரத்தில் புல்வெளிகளுக்கு இடையேயான களைகளை அகற்றுதல், நடைபாதை மற்றும் செடி, கொடிகளை சரியாக பராமரித்தல், புல்வெளி அல்லது செடிகள் அடர்த்தியாக உள்ள இடங்களில் வறண்டு அல்லது வளர்ச்சியின்றி இருப்பின் அவ்விடங்களில் புதியதாக செடி கொடிகளை உடனடியாக நட்டு பராமரித்தல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    மேலும், ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி தகுதியுடைய தேவையான எண்ணிக்கையில் பணியாளர்கள் நியமித்தல், பார்வையாளர்கள் புகார்களை தெரிவிக்க ஒவ்வொரு பூங்காவிலும் புகார் பதிவேடு மற்றும் பூங்காவின் நுழைவு வாயிலில் பார்வை நேரம், பணியாளர்களின் எண்ணிக்கை அடங்கிய விவரங்கள் காட்சிப்படுத்தி இருக்க வேண்டும்.

    பூங்காத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் மேற்குறிப்பிட்ட பராமரிப்பு பணிகளை சரிவர மேற்கொள்ளாத ஒப்பந்த நிறுவனங்களுக்கு 31.07.2021 முதல் 16.10.2021 வரை ரூ.4,96,317 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    பூங்காக்கள் பராமரிப்பு பணியில் தொடர்ந்து குறைபாடு மற்றும் தொய்வு கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்.

    குடியிருப்பு நலச்சங்கங்கள் தங்கள் பகுதியில் உள்ள பூங்காக்களை கண்காணித்து பூங்காக்களில் உள்ள குறைபாடுகள் மற்றும் புகார்கள் குறித்து மண்டல அலுவலகம் அல்லது வட்டார துணை ஆணையாளர் அலுவலகம் அல்லது தலைமையிடத்தில் உள்ள 1913 என்ற தொலைபேசி உதவி எண்ணில் தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×