search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகர்கோவில் ரெயில்வே குடியிருப்பில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்து நின்ற காட்சி.
    X
    நாகர்கோவில் ரெயில்வே குடியிருப்பில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்து நின்ற காட்சி.

    குமரியில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை- நாகர்கோவிலில் 63 மி.மீ. பதிவு

    கொட்டாரம், மயிலாடி பகுதிகளிலும் இடைவிடாது கொட்டிய மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் இரவு பல கிராமங்கள் இருளில் மூழ்கியது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த 3 வாரமாக தினமும் மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் அரபிக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கனமழை பெய்யுமென்று வானிலை மையம் எச்சரித்திருந்தது. அதன்படி, நேற்று மாலை முதலே குமரி மாவட்டம் முழுவதும் மழை பெய்யத் தொடங்கியது. இரவும் இடைவிடாது மழை கொட்டி தீர்த்தது.

    நாகர்கோவிலில் நேற்று இரவு பெய்யத் தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. இன்று காலை 9 மணி வரை வானம் இருள் சூழ்ந்த நிலையில் இருந்தது. மழையும் பெய்து கொண்டே இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு வாகனங்களை ஓட்டி சென்றனர்.

    மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது. அவ்வை சண்முகம் சாலை, கோட்டார் சாலை, செட்டிக்குளம் சாலை, மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நாகர்கோவில் ரெயில்வே குடியிருப்பை சுற்றி வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

    மழையின் காரணமாக பெரும்பாலான பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. நாகர்கோவிலில் அதிகபட்சமாக 63 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    கொட்டாரம், மயிலாடி பகுதிகளிலும் இடைவிடாது கொட்டிய மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் இரவு பல கிராமங்கள் இருளில் மூழ்கியது. பூதப்பாண்டி, சுருளோடு, அடையாமடை, கோழிப்போர்விளை, குளச்சல், ஆரல்வாய்மொழி, தக்கலை, மார்த்தாண்டம், அஞ்சுகிராமம், களியல், திருவட்டார் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது.

    இன்று காலையிலும் மழை பெய்து கொண்டே இருக்கிறது. திற்பரப்பு அருவி பகுதியிலும் மழை பெய்து வருவதால் அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் கொட்டி வரும் மழையால் அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையின் நீர்மட்டத்தை கண்காணித்து அதற்கேற்ப தண்ணீரை வெளியேற்றி வருகிறார்கள். பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் குழித்துறையாறு, கோதையாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குழித்துறையாற்றில் சப்பாத்து பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் செல்கிறது. மலையோர கிராமங்களான குற்றியாறு, கிழவியாறு, மணலோடை பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக மலையோர கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 43.60 அடியாக உள்ளது. அணைக்கு 1,373 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1,450 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.72 அடியாக உள்ளது. அணைக்கு 997 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1,980 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சிற்றாறு-1 அணையின் நீர்மட்டம் 16 அடியாக இருந்தது. அணைக்கு 274 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 272 கனஅடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்படுகிறது. 3 அணைகளிலும் இருந்து 3,702 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுவதால் குழித்துறையாற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.

    Next Story
    ×