search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செங்கோட்டை பகுதியில் மழை பெய்த போது எடுத்த படம்.
    X
    செங்கோட்டை பகுதியில் மழை பெய்த போது எடுத்த படம்.

    நெல்லை, தென்காசி மாவட்டத்தில் தொடர் மழையால் அறுவடை பணிகள் பாதிப்பு

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குண்டாறு, அடவிநயினார், குற்றாலம் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
    செங்கோட்டை:

    வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இன்றும் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. புறநகர் பகுதிகளான ராதாபுரம், களக்காடு, பாபநாசம், கொடுமுடியாறு உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    இன்று அதிகாலை முதலே ராதாபுரம், பழவூர், பணகுடி உள்ளிட்ட பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. மாநகர பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. குளிர்ந்த காற்று வீசி வருகிறது.

    விட்டு விட்டு பெய்யும் மழை காரணமாக முன்கார் சாகுபடி பணியில் பயிரிடப்பட்டு இருந்த நெல் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    பெரும்பாலான இடங்களில் மழை காரணமாக வயலுக்கு தண்ணீர் தேங்கி இருப்பதால் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.

    இன்று காலை நிலவரப்படி ராதாபுரம் பகுதியில் அதிகபட்சமாக 22 மில்லி மீட்டர் மழை பெய்தது. பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணை பகுதியில் தலா 2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் 108.30 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு 1504 கன அடி நீர் வினாடிக்கு வந்து கொண்டிருக்கிறது. சேர்வலாறில் 125.79 அடியும், மணிமுத்தாறில் 67.30 அடியும் நீர் இருப்பு உள்ளது.

    தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை பெரும்பாலான இடங்களில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. ஆலங்குளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குண்டாறு, அடவிநயினார், குற்றாலம் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    கடையநல்லூர், சிவகிரி, தென்காசி, செங்கோட்டை, புளியரை பகுதிகளிலும் சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இன்று காலை புளியரை, கற்குடி, வல்லம், செங்கோட்டை, தவணை ஆகிய பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் இதமான மழை பெய்து வருகிறது.

    மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ஏற்கனவே அடவிநயினார் அணை நிரம்பி விட்டது. குண்டாறு அணை பல மாதங்களாக நிரம்பி வழிகிறது.

    செங்கோட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர் மழையால் விவசாயிகள் அறுவடை செய்ய முடியாமல் பாதிப்பு அடைந்துள்ளனர்.
    Next Story
    ×