search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திற்பரப்பு அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதை காணலாம்
    X
    திற்பரப்பு அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதை காணலாம்

    பெருஞ்சாணி அணையில் இருந்தும் உபரிநீர் வெளியேற்றம்- மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொட்டி தீர்த்து வந்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகள் நிரம்பி வழிகிறது. மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாசன குளங்களும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் கும்பப்பூ சாகுபடி பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. பேச்சிப்பாறை, சிற்றார், சுருளோடு மற்றும் மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் நேற்றும் மழை பெய்தது. இதனால் பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் அதிகளவில் வந்து கொண்டிருக்கிறது.

    அணையின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் இன்று பெருஞ்சாணி அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.

    அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதன் காரணமாக கோதையாறு மற்றும் குழித்துறை ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அங்குள்ள நீச்சல்குளம் மற்றும் சிறுவர் பூங்காவை மூழ்கடித்து வெள்ளம் செல்கிறது. அருவியில் குளிப்பதற்கு இன்னும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை என்பதால் திற்பரப்பு பகுதி வெறிச்சோடியே காணப்படுகிறது.

    48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 43.70 அடியாக இருந்தது. அணைக்கு 1,746 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து உபரி நீராக 1,450 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது .

    77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 74.50 அடியாக உள்ளது. அணைக்கு1,122 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து மதகு வழியாக 500 கனஅடி தண்ணீரும், உபரிநீராக 268 கனஅடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டுள்ளது.

    சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 16.04 அடியாக உள்ளது. அணைக்கு 278 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றார்-2 அணை நீர்மட்டம் 16.14 அடியாக உள்ளது. அணைக்கு 13 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    54.12 அடி கொள்ளளவு கொண்ட மாம்பழத்துறையாறு அணை கடந்த 2 வாரங்களாக கொட்டி தீர்த்த மழைக்கு பிறகும் நீர்மட்டம் உயரவில்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கி வரும் முக்கடல் அணை நீர்மட்டம் கடந்த 10 நாட்களாக முழு கொள்ளளவான 25 அடியை எட்டி நிரம்பி வழிகிறது. அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் மறுகால் பாய்ந்து வருகிறது.



    Next Story
    ×