search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரி அணையில் இருந்து வெள்ளம் சீறிப்பாய்ந்து வெளியேறுவதை காணலாம்
    X
    குமரி அணையில் இருந்து வெள்ளம் சீறிப்பாய்ந்து வெளியேறுவதை காணலாம்

    குமரியில் இன்றும் பரவலாக மழை- பேச்சிப்பாறை அணை மூடல்

    குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக செங்கல் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    கடந்த இரண்டு நாட்களாக மலையோர பகுதிகளிலும் நீர்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை கொட்டி தீர்த்து வந்தது. வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக குமரி மாவட்டத்தில் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்து இருந்தது.

    இந்நிலையில் இன்று காலையில் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. நாகர்கோவிலில் இன்று காலை 6 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரமாக மழை கொட்டி தீர்த்தது. அதன்பிறகு வானம் மப்பும் மந்தாரமுமாக இருள் சூழ்ந்து காணப்பட்டது. அவ்வப்போது மழை கொட்டியது.

    கொட்டாரம், மயிலாடி, ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி, தடிக்காரன் கோணம், கீரிப்பாறை, மார்த்தாண்டம், அருமனை, தக்கலை, இரணியல் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் இன்று காலை மழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்தது.

    பேச்சிப்பாறையில் அதிகபட்சமாக 22 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு அதிகமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டத்தை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். பேச்சிப்பாறை அணையில் இருந்து நேற்று 5 ஆயிரம் கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் இன்று அணை மூடப்பட்டுள்ளது. அணையில் இருந்து உபரிநீர் மற்றும் மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்படவில்லை. பெருஞ்சாணி, சிற்றாறு-2 அணைகளும் மூடப்பட்டுள்ளது. சிற்றாறு-1 அணையில் இருந்து மட்டும் 200 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் தொடர்ந்து வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 42.90 அடியாக உள்ளது. அணைக்கு 2,133 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 70.50 அடியாக உள்ளது. 635 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றார்-1 அணை நீர்மட்டம் 16.07 அடியாக உள்ளது. அணைக்கு 212 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

    குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக செங்கல் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தடிக்கரன்கோணம், தோவாளை, அருமநல்லூர் பகுதிகளில் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    செங்கல் சூளைகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் விவசாயிகள் பலர் வேலையின்றி தவித்து வருகிறார்கள். கீரிப்பாறை, குலசேகரம் பகுதியில் உள்ள ரப்பர் மரங்களில் உள்ள சில இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ரப்பர் தோட்டங்களில் மழை நீர் தேங்கி உள்ளதால் தொழிலாளர்கள் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.

    குமரி மாவட்டத்தில் பொற்றையடி, பூதப்பாண்டி, தக்கலை பகுதிகளில் கன்னிப்பூ சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இங்கு நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளது. ஆனால் மழையின் காரணமாக வயல் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகிறார்கள்.

    இது ஒருபுறம் இருக்க அருமநல்லூர், தெரிசனங்கோப்பு பகுதியில் அறுவடை முடிந்து விவசாயிகள் கும்பப்பூ சாகுபடியில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.



    Next Story
    ×