search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பென்னிக்ஸ் - ஜெயராஜ்
    X
    பென்னிக்ஸ் - ஜெயராஜ்

    சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் கல்லூரி மாணவர் கோர்ட்டில் பரபரப்பு சாட்சியம்

    சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு தொடர்பு இருப்பதாக கல்லூரி மாணவர் கோர்ட்டில் பரபரப்பு சாட்சியம் அளித்துள்ளார்.
    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அங்குள்ள போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் தாக்கப்பட்டதில் படுகாயம் அடைந்து இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

    இந்த வழக்கு குறித்து சி.பி.ஐ. போலீசார் விசாரித்து, குற்றப்பத்திரிகையை மதுரை மாவட்ட கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சாட்சிகளிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    இந்தநிலையில் அந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது ஜெயராஜ் நடத்திய செல்போன் கடைக்கு அருகில் இருந்த பழக்கடையில் பகுதி நேர ஊழியராக இருந்த என்ஜினீயரிங் மாணவர் அர்வின் ஆஜரானார். அவர் சாட்சியம் அளித்தார். இந்த வழக்கு விசாரணை நேற்று மதியம் 12 மணிக்கு தொடங்கி, மாலை 3 மணி வரை நடந்தது. அர்வினிடம் எதிர்தரப்பு வக்கீல்கள் குறுக்கு விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கை வருகிற 8-ந்தேதிக்கு நீதிபதி பத்மநாபன் ஒத்திவைத்தார்.

    இந்த வழக்கு விசாரணை குறித்து ஜெயராஜ் மனைவி செல்வராணி தரப்பு வக்கீல் ராஜீவ்ரூபஸ் கூறுகையில், ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலையில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று தான் சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் கூறி வந்தார். ஆனால் நேற்று அர்வின் ஆஜராகி, ஜெயராஜை போலீஸ் வேனில் ஏற்றும்போது எந்த தவறும் செய்யாத தன்னை ஏன் அழைக்கிறீர்கள் என்று கேட்டார்.

    அதற்கு வேனில் முன்பகுதியில் அமர்ந்திருந்த இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், நீ தான் எல்லாவற்றுக்கும் காரணம். பேசாமல் வண்டியில் ஏறி உட்கார் என்று கூறியதாக கோர்ட்டில் அர்வின் சாட்சியளித்துள்ளார்.

    இதன்மூலம் இந்த இரட்டைக்கொலை வழக்கில் ஸ்ரீதருக்கும் முக்கிய பங்கு உள்ளது என்பது உறுதியாகி இருக்கிறது என்றார்.
    Next Story
    ×