search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்தில் அரசு பஸ் நொறுங்கி கிடக்கும் காட்சி.
    X
    விபத்தில் அரசு பஸ் நொறுங்கி கிடக்கும் காட்சி.

    பழனியில் விபத்து- அரசு பஸ் மீது லாரி மோதியதில் 3 பேர் பலி

    பழனி அருகே இன்று அதிகாலையில் அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
    பழனி:

    தேனியில் இருந்து பழனி வழியாக கோவைக்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் 20 பேர் பயணம் செய்தனர். பஸ்சை தேனியை சேர்ந்த செல்லபாண்டி என்பவர் ஓட்டிவந்தார். அதிகாலை 2.30 மணியளவில் பழனியை அடுத்த தாழையம் என்ற இடத்தில் சென்றபோது எதிரே பழனி நோக்கி வந்த லாரி பயங்கரமாக அரசு பஸ் மீது மோதியது.

    இதில் பஸ்சின் முன்பக்கம் சுக்குநூறாக உடைந்ததுடன் உள்ளே இருந்த பயணிகளும் காயமடைந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்த திருக்குமரன் மகன் விக்கிரபாண்டி(24), பொள்ளாச்சியை சேர்ந்த மணிகண்டன்(30), முருகன்(38) ஆகியோர் உயிரிழந்தனர்.

    அரசு பஸ் டிரைவர் செல்லபாண்டி மற்றும் லாரியை ஓட்டிவந்த பழனியை சேர்ந்த டிரைவர் ராஜேஷ், பஸ்சில் பயணம் செய்த தர்மர், முருகன், சுதாகர், ஸ்டீபன், ராஜசேகர், மணிவேல், கருப்புசாமி உள்பட 15 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சாமிநாதபுரம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    விபத்து நடந்த இடத்தில் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். லாரி டிரைவர் ராஜேஷ் தூக்கத்தில் லாரியை ஓட்டிவந்ததாலேயே விபத்து நடந்துள்ளது என தெரியவந்துள்ளது. இதுகுறித்து சாமிநாதபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×