search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓ.பன்னீர்செல்வம்
    X
    ஓ.பன்னீர்செல்வம்

    அரசு பணத்தை வீணடிப்பதை தடுத்து நிறுத்துங்கள்- ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

    அரசுப் பணம் வீணடிக்கப்படுவதைத் தடுக்கவும், பாதசாரிகளின் நலன்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னையில் ஏற்கனவே நல்ல நிலையில் உள்ள நடைபாதைகளில் இருந்த கருங்கற்கள், சிமெண்ட் கற்கள் பெயர்த்து எடுக்கப்பட்டு குப்பையில் வீசப்படுவதாகவும், அதற்குப் பதிலாக புதிதாக கிரானைட் கற்கள் பொருத்தப்படுவதாகவும் பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.

    ஏற்கனவே இருந்த கருங்கற்கள் மற்றும் சிமெண்ட் கற்களினால் ஆன நடைபாதைகள் சிறுவர்கள், மூத்தக் குடிமக்கள், கர்ப்பிணிப் பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் நடப்பதற்கு ஏதுவாக இருந்ததாகவும், இதுபோன்ற நடைபாதைகள் மழைக் காலங்களிலோ அல்லது தண்ணீர் இருக்கும் இடங்களிலோ சறுக்காமல் பிடிமானத்துடன் இருந்ததாகவும், ஆனால் தற்போது பளபளப்பான கிரானைட் கற்களால் அமைக்கப்படும் நடைபாதைகள் சறுக்கும் தன்மை உடையதாக உள்ளதாகவும், இதன் காரணமாக மூத்த குடிமக்கள், சிறுவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோர் நிலை தடுமாறும் சூழ்நிலை ஏற்படுவதாகவும், இதற்குப் பயந்து பெரும்பாலான பாதசாரிகள் நடைபாதைகளில் நடக்காமல் சாலையின் ஓரமாக நடப்பதாகவும், கிரானைட் கற்கள் பதித்த நடைபாதை ஆபத்தானதாக உள்ளதாகவும் பாதசாரிகள் தெரிவிப்பதாக தகவல்கள் வருகின்றன.

    மேலும் ஏற்கனவே நல்ல நிலையில் இருந்த கருங்கற்கள் மற்றும் சிமெண்ட் கற்களினாலான நடைபாதைகள் பெயர்த்து எடுக்கப்பட்டு குப்பைத் தொட்டியில் வீசப்படுவதாகவும், இதன் காரணமாக மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மொத்தத்தில் இதுபோன்ற நடவடிக்கை, அரசு பணம் வீண், பொதுமக்கள் அச்சம் என இரட்டிப்பு பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது.

    ‘மக்களுக்காக திட்டங்கள், திட்டங்களுக்காக மக்கள் அல்ல’ என்ற கோட்பாட்டிற்கேற்ப, மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய மக்களின் வரிப்பணம் வீணாகக்கூடிய, விபத்துக்களையும், அதன் மூலம் உயிரிழப்பையும் ஏற்படுத்தக்கூடிய இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டியது அரசின் கடமை என பொதுமக்கள் கருதுகிறார்கள்.

    எனவே, முதல்-அமைச்சர் உடனடியாக கவனம், செலுத்தி இதன் உண்மை நிலையைக் கண்டறிந்து, பாதசாரிகளின் கருத்துக்களையும் கேட்டறிந்து, அரசுப் பணம் வீணடிக்கப்படுவதைத் தடுக்கவும், பாதசாரிகளின் நலன்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×