search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    மதுரையில் மருத்துவ மாணவிகள் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு

    மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஒரு வாரம் முன்பு வரை கொரோனா தினசரி பாதிப்பு 14 ஆக இருந்தது. அது இப்போது இரண்டு மடங்காக அதிகரித்து உள்ளது.

    மதுரை:

    தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த ஆண்டு அதிகமாக இருந்தது. இதனைத் தொடர்ந்து கல்லூரிகள் மூடப்பட்டன. அப்போது மாணவ- மாணவிகளுக்கு இணைய வழியில் பாடங்கள் சொல்லித் தரப்பட்டு வந்தன.

    இந்த நிலையில் கொரோனா பரவல் நடப்பாண்டு படிப்படியாக குறைந்து வருகிறது. எனவே தமிழக அரசு மாநிலம் முழுவதிலும் உள்ள கல்லூரிகள் மற்றும் செவிலியர் படிப்பு உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் சார்ந்த கல்லூரிகளையும் கடந்த ஆகஸ்ட் மாதம் 16-ந் தேதி முதல் மீண்டும் திறக்க உத்தரவிட்டது.

    மதுரையில் அரசு மருத்துவக்கல்லூரி 5 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவ-மாணவிகள் மகிழ்ச்சியுடன் கல்லூரிக்கு வந்தனர்.

    அப்போது அவர்களிடம் கொரோனா மருத்துவ சான்று கோரப்பட்டது. கொரோனா பரிசோதனை செய்யாதவர்களுக்கு மருத்துவமனை வாயிலில் பரிசோதனை நடத்தப்பட்டது.

    மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தெர்மல் ஸ்கேனர் மூலம் மாணவ-மாணவிகள் உடல்வெப்ப சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதன் பிறகே அவர்கள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    கல்லூரி வகுப்பறையில் மாணவமாணவியர் முக கவசம் அணிய வேண்டும், கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், சமூக இடைவெளிவிட்டு அமரவேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்பட்டன. கல்லூரி வளாகத்தில் மாணவ மாணவிகள் அருகருகே நின்று பேசுவது கூட தடை செய்யப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் மதுரை மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த 5 மாணவிகளுக்கு கடந்த சில நாட்களாக தீராத காய்ச்சல், இருமல் இருந்து வந்தது. எனவே அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. அப்போது அவர்களுக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது.

    இதையடுத்து 3 மாணவிகள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 2 மாணவிகள் லேசான தொற்று அறிகுறிகள் இருப்பதால் தனிமைப்படுத்திக் கொண்டனர்.

    இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து பார்க்கப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

    மதுரை மருத்துவக் கல்லூரி விடுதியில் 5 மாணவிகளும் தங்கி இருந்த அறை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டு, அதன் பிறகு மூடப்பட்டு உள்ளது.

    மதுரை மருத்துவக் கல்லூரியில் 5 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மருத்துவக் கல்லூரி வளாகம், வகுப்பறை, தங்குமிடம் ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

    மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஒரு வாரம் முன்பு வரை கொரோனா தினசரி பாதிப்பு 14 ஆக இருந்தது. அது இப்போது இரண்டு மடங்காக அதிகரித்து உள்ளது.

    கடந்த 14-ந் தேதி 26, 15-ந் தேதி 22, 16-ந் தேதி 17 பேர் பாதிக்கப்பட்டனர். 17-ந் தேதி 20, 18-ந் தேதி 15 என்ற அளவில் நோய்தொற்று எண்ணிக்கை உள்ளது. 19-ந் தேதி 20 பேருக்கும், 20-ந் தேதி 27 பேருக்கும் தொற்று அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. மதுரையில் கொரோனா மருத்துவமனையில் 199 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கடந்த 2 நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ள நிலையில் மதுரையில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறதா? என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×