search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமல்ஹாசன்
    X
    கமல்ஹாசன்

    ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற சட்டசபையில் சிறப்பு தீர்மானம் - கமல்ஹாசன் வலியுறுத்தல்

    தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதிகளில் உறுதியளித்தபடி, ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றிட, சட்டசபையில் சிறப்பு தீர்மானம் உடனடியாக இயற்றப்பட வேண்டும். தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் ஆலையால் சந்தித்த, சந்திக்கும், சந்திக்கப்போகும் துயரங்கள் அனைவரும் அறிந்தவை. எதிர்வரும் சந்ததிகளையும் பாதிக்கும் அளவிற்கு தீவிளைவுகள் அங்கே நிகழ்ந்துவிட்டன.

    இந்த ஆலையிலிருந்து 82 முறை விஷவாயு கசிந்ததாக தமிழக அரசு குற்றம் சாட்டியதும், விதிமுறைகளை மீறி சூழலைச் சீரழித்திருக்கிறது என சுப்ரீம் கோர்ட்டே கண்டித்து ரூ.100 கோடி அபராதம் விதித்ததும் வரலாறு.

    சுமார் 20 ஆயிரம் பேர் மூன்றாண்டுகளாக போராடி 13 பேர் தங்களது இன்னுயிரை நீத்த பிறகுதான் இந்த உயிர்க்கொல்லி ஆலையை அடைக்க முடிந்தது. நிரந்தர ஊனமானவர்கள், வழக்குகளால் வாழ்க்கையை இழந்தவர்களின் எண்ணிக்கைக்கு கணக்கு இல்லை.

    கடந்த ஓராண்டாகத்தான் தூத்துக்குடி மக்கள் விஷக்காற்றை சுவாசிப்பது ஓரளவேனும் குறைந்திருக்கிறது. ‘ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றும் தீர்மானத்தை’ நிறைவேற்ற வேண்டும் என்றும் தாமிர உற்பத்திக்கான நெறிமுறைகளைத் தமிழக அரசு உருவாக்க வேண்டும் என்றும் 2018-ம் ஆண்டு அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் தமிழக அரசை வலியுறுத்தினார்.

    தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதிகளில் உறுதியளித்தபடி, ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நடைபெற்றுக் கொண்டிருக்கும் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே இந்த உயிர்க்கொல்லி ஆலையை நிரந்தரமாக அகற்றும் சிறப்புத் தீர்மானத்தை இயற்ற வேண்டும். தீர்மானத்தின் நகல் சுப்ரீம் கோர்ட்டின் பார்வைக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும்.

    அத்துடன், சொந்த ஆதாயங்களுக்காக விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு ஸ்டெர்லைட் ஆலை சர்வ சுதந்திரமாகச் சூழலை சீரழிக்க அனுமதித்த அரசு அதிகாரிகள் மீதும் நீள்துயிலில் இருந்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் நிகழ்ந்த படுகொலைகளுக்கு காரணமான குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கவும், இந்த போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை இழந்தவர்களுக்குத் தூத்துக்குடியிலேயே நினைவகம் அமைத்திடவும் முதல்-அமைச்சர் ஆவன செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×