search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடைக்கானல் வெள்ளிநீர்வீழ்ச்சியில் இன்று குவிந்த சுற்றுலா பயணிகள்.
    X
    கொடைக்கானல் வெள்ளிநீர்வீழ்ச்சியில் இன்று குவிந்த சுற்றுலா பயணிகள்.

    கொடைக்கானலில் கட்டுப்பாடுகளை மீறி தடை செய்யப்பட்ட இடங்களில் குவியும் சுற்றுலா பயணிகள்

    கொரோனா கட்டுப்பாடுகளை மீறி கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருவதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    கொடைக்கானல்:

    தமிழகத்தில் கொரோனா 3-ம் அலையை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி சுற்றுலா இடங்களுக்கு வெளி மாநிலத்தவர் வருவது தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் கொடைக்கானலுக்கு வரும் வெளி மாநிலத்தவர் கண்டிப்பாக கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி நகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் வெள்ளி நீர்வீழ்ச்சி சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டு அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது. தொற்று அறிகுறி உள்ளவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

    கொடைக்கானலில் வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. வனத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்கள் மூடப்பட்டுள்ள போதிலும் ஏரிச்சாலை, வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

    மேலும் டால்பின் நோஸ், வட்டக்கானல், பாம்பாறு அருவி, ஐந்தருவி, பேத்துப்பாறை, ஆகிய பகுதிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் டால்பின் நோஸ் பகுதியில் சுற்றுலா பயணிகள் அதிக அளவு குவிந்து வருகின்றனர். மேலும் ஆபத்தை உணராமல் அபாயகரமான இடங்களில் நின்று செல்பி எடுத்தும் செல்கின்றனர்.

    மேலும் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூண்டி ஆகிய பகுதிகளுக்கும் வாகனங்கள் மூலம் படையெடுத்து செல்கின்றனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் கொரோனா விதிகளும் காற்றில் பறக்கவிடப்படுகிறது. கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக சாரல் மழை விட்டு விட்டு பெய்து வரும் நிலையில் அதனையும் பொருட்படுத்தாது சுற்றுலா பயணிகள் மழையில் நனைந்து உற்சாகமாக செல்கின்றனர். இதனால் நகர் பகுதி மட்டுமின்றி மலை கிராமங்களிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    சென்னையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர். ஏரிச்சாலை அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக அவ்வழியே வந்த லாரி மீது மோதியது. இதனால் லாரி டிரைவருக்கும் சென்னையைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கும் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×