search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொடர்ந்து அதிகரிக்கும் அணையின் நீர்மட்டம்- ஆழியாற்றில் குளிக்க தடை
    X

    தொடர்ந்து அதிகரிக்கும் அணையின் நீர்மட்டம்- ஆழியாற்றில் குளிக்க தடை

    ஆழியார் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்ததால் இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 110.70 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் வருகிறது.
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் ஆழியாறு அணை உள்ளது. 120 அடி உயரம் கொண்ட இந்த அணையில் இருந்து பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது.

    கடந்த சில நாட்களாக ஆழியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 24-ந்தேதி அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது.

    தொடர்ந்து அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்ததால் இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 110.70 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 190 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் ஆழியார் அணை முழுவதும் நிரம்பி விட வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    விரைவில் அணை நிரம்ப வாய்ப்புள்ளதால் பாதுகாப்பு கருதி, அணையின் கரையோர பகுதியை சேர்ந்த மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ஆழியார் அணையின் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தற்போது முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நீர்மட்டம் 115 அடியை எட்டியதும் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும் என்றனர்.

    ஆழியார் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் ஆழியாற்றின் வழியாக கேரளாவுக்கு செல்கிறது. இந்த ஆற்றில் கோட்டூர், ஆழியாறு, மயிலாடுதுறை, அம்பராம்பாளையம், ஆத்து பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குளிப்பது, ஆடு, மாடுகளை குளிக்க வைப்பது வழக்கம்.

    ஆழியாறு அணையின் நீர்மட்டம் உயருவதுடன், தண்ணீர் வரத்து சற்று அதிகமாக உள்ளதால் எந்த நேரம் வேண்டுமானாலும் பாதுகாப்பு கருதி ஆழியாற்றில் தண்ணீர் திறக்கப்படலாம் என்பதால் மக்கள் ஆழியாற்றில் இறங்கி குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். ஒவ்வொரு கிராமம் கிராமமாக சென்று பொதுமக்களுக்கு தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×