search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை
    X
    மேட்டூர் அணை

    மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு

    கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பால் ஒகேனக்கல் காவிரியில் 16 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    சேலம்:

    கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் பருவ மழையின் காரணமாக அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்து உள்ளது. கபினி நிரம்பி உள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி நேற்று காலை நிலவரப்படி காவிரியில் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

    அதேபோல் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 2 ஆயிரத்து 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

    கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பால் ஒகேனக்கல் காவிரியில் 16 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    அணைக்கு நேற்று 12 ஆயிரத்து 804 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 16 ஆயிரத்து 301 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இதுவும் தற்போது அதிகரிக்கப்பட்டு நேற்று மாலையில் இருந்து 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    நீர் திறப்பை விட தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் உயர தொடங்கியுள்ளது. நேற்று காலை 72.62அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 73.29 அடியானது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளது. இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×